பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்47


கள் பயிற்சியும் தரப் பெறுகிறது. ஆனால் நம் நாட்டைப் பொறுத்தவரை இவ்வாறு குரலுக்குப் பயிற்சி தரும் பழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. திரு.டி.கே. சண்முகம் என்ற ஆண்மகனார் ஒளவையாக உடை உடுத்தி மூன்றுமணி நேரம் பெண்ணைப் போல் நடிப்பதே பெரியகலை ஆகும். அதற்கும் மேலாக பெண்ணாகவே குரலையும் மாற்றிக் கொண்டு பேசுதல் என்றால், அதுதான் யான் குறிப்பிட்ட குரற்பயிற்சிக் கலை என்பதாகும்.

மேலே கூறியவை தவிர இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றி வளர்ந்துவரும் பயில்முறை நாடகக் குழுக்களும் தம்மால் இயன்ற அளவு இத்துறைக்குத் தொண்டுசெய்து வருகின்றன. இப்பகுதியினர் நடத்தும் நாடகங்கள் அனைத்தும் சமுதாய சம்பந்தமான நாடகங்களேயாகும். இவற்றுட் சில நகைச்சுவையுடன் அறிவு கொளுத்தும் நோக்கத்துடன் நடைபெறுகின்றன. சமுதாயப் புரட்சியை ஏற்படுத்துவதற்கு நாடகத்தைக் கருவியாகக் கொள்வது என்பது பழமையான ஒன்றுதான். எனினும் காலஞ்சென்ற அறிஞர் அண்ணா அவர்கள் இத்துறையில் வெற்றி பெற்றதுபோல் இதுவரை யாருஞ்செய்யவில்லை என்று கூறினால் மிகையாகாது. பிரச்சார நாடகங்கள் வெறும் பிரசாரமாக மட்டும் அமைந்துவிடாமலும், தாம் செய்யும் பிரசாரத்தை வெளிப்படையாகச் செய்யாமலும் கலையழகுடன் நடைபெறவேண்டும். அதேபோல நகைச்சுவை நாடகங்கள் அந்த நேரத்தில் நகைப்பை