பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்

59



இருப்பர். நீண்ட நாட்கள் நாடகம் ஓடாது. நீண்ட காலம் நடைபெற்றது என்றால் இந்த வசனம் பலருக்கும் புரிந்திருந்தது என்றே கொள்ள வேண்டும்.

அனைத்தும் பாடல்களே

அற்றை நாள் நாடகங்கள் பெரும் பகுதி பாடல்களாகவும், சிறு பகுதி உரையாடல்களாகவும் இருந்தன என்பதை நம்மில் பலரும் அறிவோம். அந்த உரையாடல்களும் முதலில் காணப்படும் பாடலின் கருத்தை உரை நடையில் கூறுவதாகும். எனவே பாடல் புரியவில்லையானால் அடுத்து வரும் உரைநடை அதை விளக்கி விடும். இதனைப் புரிந்து கொண்ட பிறகு மறுமுறை பாடல்களைப் புரிந்து கொள்ள முடியும். 'சாகப் போகும் தறுவாயிலும் பாட்டு, செத்துக் கிடக்கும் போதும் பாட்டு, அழும் போதும் பாட்டு எந்த எந்தச் சந்தருப்பத்திலும் பாட்டு’ என்று ஒருவர் அந்நாளைய நாடகங்கள் பற்றி எழுதினாராம். ஆனால் இவ்வாறு இருந்ததில் என்ன தவறு என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சங்க நூல்கள் என்று கூறப் பெறும் பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் பாடல்களாகவே அமைந்துள்ளன. இவற்றிற்கு முற்பட்டவராகிய தொல்காப்பியர் உரையைப் பற்றிப் பேசி, அது நான்கு வகைப்படும் என்றும் பெயர் கூறிச் செல்கிறார். -

பாட்டிடை வைத்த குறிப்பினானும்
பாவின் றெழுந்த கிளவி யானும்

1. 19ஆம் நூற்றாண்டில் தமிழிலக்கியம் - மயிலை, சீனி. வேங்கடசாமி. பக். 404.