பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்

75



என்ற குறளும் பயன்படுத்தப் பெற்றுள்ளன. இதே போல எல்லா நாடகங்களிலும், குறட்பாக்களும் குறட் கருத்துக்களும் பெரிதும் இடம் பெற்றுள்ளன. கல்வி, அறிவு அதிகம் இல்லாத மக்களும் கண்டு களிப்பதற்காகவே எழுதப் பெற்ற இந்நாடகங்களில் சுவாமிகள் இவ்வளவு குறள்களையும் குறட்கருத்துக்களையும் பயன்படுத்தி உள்ளார் எனில், கற்றறிவிலாத மக்களைச் சீர் திருத்த வேண்டும் என்ற அவருடைய ஆர்வத்தைத்தான் இதில் காணமுடிகிறது.

நகைச்சுவை

இனிக் கலைமகளின் மேல் பாடப் பெற்றுள்ள பாடலில் இலக்குமியின் கருணை வேண்டி நகைச்சுவையுடன் பாடியுள்ளார். கலைமகளாகிய சரசுவதியை விளித்து ‘அம்மா! உன் மாமியாராகிய இலக்குமியின் கடைக்கண் பார்வை எனக்கு வேண்டும்' என்று பாடுகிறார். அந்தப் பாடலில் அவர் காலத்துத் தமிழ்ச் சமுதாயம் இருந்த அவல நிலையை நகைச்சுவையுடன் நன்கு விளக்குகிறார்.

பாவின்நிலை அறியாதவர்கள் மாட்டுப்
பாடுகின்றார் ஊரார் பக்கம் நின்று கேட்டு
ஆவல் பரிசளிக்கின்றார் போட்டிபோட்டு
அத்தனையும் உன்றன் அத்தை விளையாட்டு

இன்று நம்முடைய காலத்தில் இருப்பது போலத்தான் சுவாமிகள் காலத்திலும் அறிவில்லாதவர்களிடம் செல்வம் குவிந்திருந்தது போலும். அவர்களிற் சிலர் தம்மை அறிவுடையோராகக் கருதிக் கொண்டு பாடல் முதலியன பாடத் தொடங்கினர் போலும்,