பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 195

இப்படி நாடகக்கலை கட்டுப்பாடின்றி நலிவதைக்கண்டு வேதனையுற்று, இதற்கோர் மாற்றுமுறையை 1910 ஆண்டில் பரீட்சார்த்தமாகக் கையாளத் திட்டமிட்டுக் கும்பகோணம் தாப்பா வெங்கடாஜல பாகவதர் என்பவர் 10-12 வயதிற்குட்பட்ட சிறுவர்களைச் சேர்த்துப் பயிற்சி யளித்து, லலிதாங்கி என்னும் நாடகத்தை தயாரித்துத், தன் உறவினரும் செல்வந்தருமாகிய ஒரு செளராஷ்டிரப் பிரமுகரின் வீட்டில் நடைபெற்ற பூப்புநீராட்டு விழாவில் கலாநிகழ்ச்சி என்ற முறையில் நடத்திக் காட்டினார். முற்றிலும் சிறுவர்களே பங்கேற்றுக் கட்டுப்பாட்டோடும் கவர்ச்சியோடும் பாடியும் பேசியும் நடித்தும், மக்களின் அமோகமான பாராட்டுக்களையும், ஆதரவையும் பெற்ற அந்நிகழ்ச்சியைக் கண்டு, உற்சாகமும் நம்பிக்கையும் கொண்ட தாப்பா வெங்கடாசல பாகவதர் மேலும் தீவிர மாகத் திட்டமிட்டு, கோவலன், வள்ளிதிருமணம் போன்ற மற்றும் பல நாடகங்களைத் தயாரித்துக்கொண்டு, முதன் முதலில் முற்றிலும் சிறுவர்களே நடிக்கும் பாலர் நாடகக் குழுவைத் தொடங்கி, கும்பகோணம், தஞ்சாவூர், திண்டுக்கல் முதலிய ஊர்களில் நாடகங்களை நடத்தி விட்டு மதுரைக்குச் சென்றனர்

திண்டுக்கல்லில் ஏற்பட்ட நஷ்டத்தால் நொடித்துப் போயிருந்த இக்குழுவினருக்கு மதுரை சச்சிதானந்தம் பிள்ளையும், மற்றும் நான்கு பேரும் நிதி உதவி செய்து நாடகங்களை நடத்தச்செய்தனர். மேலும் மேலும் நட்டமும் கடனும் ஏற்பட்டதால், கடன் கொத்திருந்த சச்சிதானந்தம் பிள்ளையும் அவர் கூட்டாளிகளாகிய நான்கு பேர்களும் கம்பெனி பின் நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டு, மேனேஜராக திரு. ஜகந்நாதய்யரை நியமித்து நடத்தி வந்தனர்.

சிறிது காலத்திற்குப் பின் கூட்டாளிகளுக்குள் ஏற்பட்ட அபிப்பிராயபேதம் காரணமாகக் கம்பெனி இரண்டாக உடைந்தது.