பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கவிஞர் கு. சா. கி.

அத்தகைய இலக்கியங்கள் சம்பந்தமாகப் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் எழுவதைத் தடுக்கும் நோக்கத் தோடுதான் அத்துறைகளில் அனுபவ முதிர்ச்சிபெற்ற அறிஞர் பெருமக்கள், முரண்பாடுகளைத் தவிர்த்து ஒரு வரம்புகட்டுவதற்கு, இலக்கணம் என்னும் கட்டுக்கோப்பை ஏற்படுத்தித் தருகின்றனர்.

இந்த நியதியின்படி பார்க்கும்போது, அகத்தியம், பரதம் போன்ற நாடக இலக்கண நூல்கள் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே தோன்றியிருக்க வேண்டுமென்பதும், அதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே தமிழில் நாடக முயற்சியும், செயல்முறைகளும் அதற்கென இலக்கியங்களும் தோன்றியிருத்தல் வேண்டும் என்பதும் வெள்ளிடைமலை.

உலக நாடுகள்-மொழிகள் எவற்றிற்கும் இல்லாத மிக நீண்ட பாரம்பரியம் தமிழில் நாடகக் கலைக்கு உண்டு என்று சான்று காட்டுவதற்கு, வேறு பல துறைகளைச் சார்ந்த பழைய இலக்கியங்களில் கிடைக்கும் குறிப்புக்களை யும், அவ்விலக்கியங்களின் உரையாசிரியர்கள் கூறும் குறிப் புக்களையும் ஆதாரமாகக் கொள்வதைத்தவிர நேரிடையாக இதோ.பார்! எங்கள் பண்டைய நாடகத்தமிழ் இலக்கியங்கள்! என்று நெஞ்சுயர்த்தி எடுத்துக்காட்டுவதற்கு ஒன்றுகூடக் கிடைக்காமற்போனது தமிழ்த்தாய்க்கு ஏற்பட்ட பேரிழப் பாகும் என்பதோடு, பொதுவாகத் தமிழர்களின் துர திருஷ்டம் என்றே கூறவேண்டும்.

நாடகம்

நாடகம், நாட்டிற்கு அணிகலம், நாகரீகத்தின் அளவு கோல், நாட்டின் பிரதிபலிப்பு, பாமரர்களின் பல்கலைக் கழகம், சமுதாயச் சீர்கேடுகளைத் தகர்க்கும் வாள்வீச்சு, இதய நாதத்தின் எழுச்சி, காலத்தின் கண்ணாடி, லட்சியக் கனவுகளையெல்லாம் ஈடேற்றி வைக்கும் அற்புத சாதனம்,