பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தமிழ் நாவல்

இந்த ஐயம் எழுகிறது. கமலாம்பாளின் கணவருக்குப் பிறர் கூறிய கோள் ஒன்றே, மன மாற்றத்தை உண்டாக்குகிறது. இங்கேயோ நாராயணனுக்கு ஐயம் உண்டாவதற்குரிய சந்தர்ப்பங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக எழுந்து அது வலிமையடையச் செய்கின்றன. அந்த வகையில் கதையை அமைத்திருக்கிறார் ஆசிரியர் மாதவய்யா. நாராயணன் தன் நண்பனாகிய கோபாலனுக்கும் பத்மாவதிக்கும் தொடர்பு இருப்பதாக ஐயுறுகிறான். இந்த விளைவுக்கு வேண்டிய சூழ்நிலையைச் சாமர்த்தியமாக ஆசிரியர் உருவாக்கியிருக்கிறார்.

சங்கரன்

ந்த ஐயத்தை உண்டாக்கக் கருவியாக நிற்கிற கொடியவன் கோபுவின் தம்பியும், கோபுவைப் போலவே நாராயணனுடன் இளமை முதல் பழகி வந்தவனுமாகிய சங்கரன். கோபுவுக்குத் தம்பியாகப் பிறந்தாலும் அவன் அடிநாள் முதலே கொடியவனாக இருக்கிறான். பொறாமையும் பழகினவர்களிடம் பற்றின்மையும் சுயநலமும் உள்ளவன் அவன். அவன் பொறாமை வளர்வதற்குரிய நிகழ்ச்சிகள் கதையில் வருகின்றன. பாத்திரங்கள், கதையின் கட்டுக்கோப்பு என்று வேறு பிரித்துச் சொல்ல வேண்டுவதில்லை. பாத்திரங்களின் இயக்கத்தில் கதைப் பின்னல் உருவாகிறது; கதைப் பின்னலினால் பாத்திரங்கள் உருவாகின்றன, இரண்டும் ஒன்றனை ஒன்று சார்ந்தவை என்று சொல்வார்கள்.[1] அதைத் தெளிவாகப் பத்மாவதி' சரித்திரத்தில் காண்கிறோம்.

நாராயணன் படிப்பிற் சிறந்தவனாக இருக்கிறான்; அவனை இழிவு தொனிக்கும்படி பேசுகிறான் சங்கரன்.


  1. 1. Robert Liddel: A Treatise on the Novel, p. 72.