பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

தமிழ் நாவல்

அவனுக்கு அன்பு உண்டாகிறது; அது காதலாக மலர்கிறது. அந்த இருவரும் கடைசியில் மகாத்மா காந்தியின் அஹிம்சா மார்க்கமே தக்க வழி என்பதை உணர்கிறார்கள்.

கதாநாயகி சீதாவின் அம்மா ராஜம் மகாத்மாவைத் தெய்வமாகப் போற்றுகிறாள். சீதாவுக்கோ அவர்தாம் வணங்கும் தெய்வமே ஆகிவீடுகிறார். அல்லலின்மேல் அல்லலாக, பழியின்மேல் பழியாக வந்து மோதி அவளை அலைக்கழிக்கின்றன. பட்டாபிராமனுக்கும் அவளுக்கும் முடிச்சுப் போட்டு, ஒரு மஞ்சள் பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டபோது. தேவிபட்டணத்தில் பட்டாபிராமன் வீட்டில் ஒரு புயலே குமுறுகிறது. பட்டாபிராமன் சீதாவின் மோவாய்க் கட்டையைப் பிடித்துக் கொண்டு ஆறுதல் சொன்னபோது பட்டாபியின் மனைவி லலிதா வந்து பார்த்துப் பேயாகக் கத்துகிறாள். அன்று இரவு நள்ளிரவில் யாரும் அறியாமல் புறப்படும் சீதா மகாத்மா காந்தியின் படத்துக்கு நமஸ்காரம் செய்து ஒரு பிரதிக்ஞை எடுத்துக் கொள்கிறாள். “காந்தி என்னும் கருணைத் தெய்வமே, தங்களுடைய ஆசியை நம்பியே இன்று நான் இந்த வீட்டை விட்டுத் தன்னந்தனியாக வெளிக் கிளம்புகிறேன். இனி நான் நடக்கப்போகும் பாதையில் எனக்கு எத்தகைய இன்னல்கள் நேர்ந்தாலும், எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டாலும், தங்களுடைய மனதுக்கு உகந்திருக்க முடியாத காரியம் எதையும் செய்ய மாட்டேன். எப்படிப்பட்ட நிலைமையிலும் எந்தக் காரியத்தையும், ‘இதைக் காந்தி மகாத்மா ஒப்புக்கொள்வாரா?’ என்று எனக்கு நானோ கேட்டு நிச்சயப்படுத்திக் கொண்டுதான் செய்வேன். இவ்விதம் தங்கள் சந்நிதியில் இதோ சத்தியம் செய்கிறேன். இந்தப் பிரதிக்ஞையை நிறைவேற்றும் சக்தியையும் தாங்களே எனக்கு அருள வேண்டும்” என்று பிரார்த்தனை செய்து புறப்பட்டு விடுகிறாள் (ப. 654-5).