பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. பொது வரலாறு

5




இத்தனை அடிகளையடையவை என்ற வரையறையில்லாத செய்யுட்கள் இன்னவை என்பதை ஒரு சூத்திரத்தில் தொல்காப்பியர் சொல்கிறார். செய்யுள் என்பது புலவனால் இயற்றப் பெறுவது என்ற பொருளையுடையது.

"அவை தாம்
நூலி னான உரையி னான
நொடியொடு புணர்ந்த பிசியி னான
ஏது நுதலிய முதுமொழி யான
மறைமொழி கிளந்த மந்திரத் தான
கூற்றிடை வைத்த குறிப்பி னான" [1]

என்பது சூத்திரம். நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு மொழி என்னும் ஆறு வகைகளை இதில் சொல்கிறார். இவற்றில் ஒன்றாக வரும் உரையை நான்கு வகையாக்கி இலக்கணம் கூறுவர்.

"பாட்டிடை வைத்த குறிப்பி னானும்
பாவின் றெழுந்த கிளவி யானும்
பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும்
பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும்
உரைவகை நடையே நான்கென மொழிப"[2]

என்பதில் அந்த நான்கையும் கூறினார். பாடல்களின் இடையிடையே வரும் குறிப்புக்கள், பாட்டேயின்றித்

தனியே வரும் உரை, உண்மையோடு சேராமல் சொல்லப் பெறும் கட்டுக் கதை. உண்மையை நகைச்சுவைப்பட சொல்லும் உரை என்பன இவை. இவற்றில் பின் இரண்டும் 'செவிலித் தாயர் சொல்வன என்று பின்னே சூத்திரம் செய்கிறார்.[3]


  1. தொல்காப்பியம், செய்யுளியல், 165
  2. தொல்காப்பியம், செய்யுளியல், 173
  3. தொல்காப்பியம், செய்யுளியல், 175