பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

தமிழ் நாவல்

பிரதாப முதலியார் சரித்திரம் ஜீவிய சரித்திரத்தைப் போலவே முன்னோர், சாதி, ஊர், பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை ஆகிய முறையில் தொடங்குகிறது; பிரதாப முதலியார் தம் வரலாற்றைத் தாமே சொல்லுவதாகிய சுயசரித்திரப் பாணியில் அமைந்திருக்கிறது. தன்மைக் கூற்றாகவும், படர்க்கைக் கூற்றாகவும் கதையைச் சொல்லும் பாணிகள் மேல் நாட்டு நாவல்களிலும் உண்டு. தன்மைக் கூற்றாகச் சொல்வதில் கதாநாயகன் தன்னுடைய அந்தரங்க உணர்வுகளையும் விருப்பங்களையும் தெளிவாக எடுத்துச் சொல்ல முடியும். 'ஆனாலும் கதையில் வரும் செயல்கள் நிகழ்ந்த காலத்தில் அவனுக்கு இருந்த மன நிலைக்கும், கதை முழுதும் நிகழ்ந்த பிறகு எல்லாவற்றையும் மீண்டும் நினைந்து சொல்லும் பிற்கால மன நிலைக்கும் வேறுபாடு இருக்கும். அப்போது நிகழ்ந்த உரையாடல்களை நினைவு கூர்ந்து எழுதுவதில் உண்மையை அவ்வப்போது சொல்லும் சுவை இராது. ஆதலின் இந்த முறை ஆசிரியனே கதை சொல்லுவதாக உள்ள பாணியைவிடச் சிறந்ததன்று.'

இந்தக் கருத்தை மேல் நாட்டு ஆசிரியையாகிய அன்னா லாக்டீஷியா பார்போல்டு என்பவர் சொல்கிறார்.[1] 1804 - ஆம் ஆண்டில் அவர் வெளியிட்ட கருத்து இது. ஆனால் சுய சரித்திரங்களையே சுவைபட எழுதும் எழுத்தாளர்கள் இப்போது வந்து விட்டார்கள். ஆதலின் சுய சரித்திரப் பாணியில் அமையும் நாவல்கள் சிறந்தன. அல்ல என்ற கருத்தை இந்தக் காலத்து மேல் நாட்டு நாவல்களைப் படித்தவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்


  1. Antia Lactitia Barbould (1804); Cited in Novelists on the Novels by Miriam Allort, p. 260.