பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

தமிழ் நாவல்

கல்யாணம் நின்று விடுகிறது. இரண்டு குடும்பத்துக்கும் இடையே பேச்சு வார்த்தை இல்லாமல் போகிறது. ஞானாம்பாளுக்கு வேறிடத்தில் பிள்ளை பார்த்து நிச்சயம் செய்ய, பிரதாப முதலியாருக்கும் வேறு பெண்ணைப் பார்த்துத் திருமணம் ஏற்பாடு செய்கிறார்கள். இரண்டு கல்யாணங்களும் வேறு ஓர் ஊரில் உள்ள ஒரு வீட்டில் இரு வேறு பகுதிகளில் ஒரே நாளில் நடப்பதாக ஒழுங்கு செய்கிறார்கள். திருமணம் நடப்பதற்குச் சில நாட்களுக்கு முன் இரண்டு குடும்பத்துக்கும் தொடர்புடைய உறவினர் இறந்து போகிறார். அதனால் திருமணத்தை உரிய நாளில் நடத்த இயலாமல் இருப்பதை இரண்டு வீட்டுக்காரர்களும் வரப்போகும் சம்பந்திகளுக்குத் தனித்தனியே எழுதி விடுகிறார்கள். ஆனால் அந்தக் கடிதங்கள் அவர்களுக்குப் போய்ச் சேரவில்லை. அந்த இரண்டு கூட்டத்தாரும் திருமணத்தன்று குறிப்பிட்ட ஊருக்கு வருகிறார்கள். சம்பந்திகளாக வர இருந்தவர்களைச் சரியாகப் பார்த்து அறியாமையால் ஒருவரை ஒருவர் சம்பந்திகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். பிரதாப முதலியாருக்குப் பேசிய பெண்ணுக்கும், ஞானாம்பாளுக்குப் பேசிய பிள்ளைக்கும் திருமணம் நடந்து விடுகிறது, பிறகு உண்மை தெரிகிறது. நடந்த மணத்தை மாற்ற முடியுமா? இவ்வாறு மற்றவர்களை மணம் செய்து கொள்வதினின்றும் பிரதாப முதலியாரும் ஞானாம்பாளும் தப்புகின்றனர்.

பிறகு ஒரு நாள் ஞானாம்பாளை அவளை மணக்க விரும்பிய ஒருவர் ஆள் வைத்துச் சிறையெடுத்துச் செல்லும்போது அவள் சாமர்த்தியமாகத் தப்பிச் செல்கிறாள். அவளைப் பிரதாப் முதலியார் மீட்டு வருகிறார். இந்தத் தீரச்செயலால் மனம் மாறிய ஞானாம்பாளின் தந்தையாராகிய சம்பந்த முதலியார் பழைய சினத்தை மறந்து தம் மகளைப் பிரதாப முதலியாருக்கே திருமணம் செய்து வைக்கிறார்.