பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

தமிழ் நாவல்

லக்ஷம் பொன் கடன் வாங்கிக்கொண்டு அந்தக் கடனைக் கொடாமல் மாறுபாடு செய்கிறவர்களுக்குக் கணக்குண்டா?' என்று கேட்கிறான். நியாயாதிபதிகள் முதலிய அதிகாரிகள் பரிதானம் வாங்குவதையும், ஜனங்களுக்குப் பாதுகாவலாக நியமிக்கப்பட்ட உத்தியோகஸ்தர்கள் அநியாய ஆர்ஜிதங்கள் பெறுவதையும், வஸ்திர வியாபாரிகளுடைய புரட்டுகளையும், இரத்தின வியாபாரிகள் செய்யும் மாறுபாடுகளையும், பொன் வணிகரின் புரட்டுகளையும், பெரிய மிராசுதார்களுடைய திருட்டையும், தெய்வ சொத்தைத் திருடுகிறவர்களின் திருட்டையும் விரிவாகச் சொல்லி விளாசுகிறான். விக்கிரம புரியின் அரசனாக மாறுவேடத்தில் இருந்து ஆட்சி புரியும் ஞானாம்பாள் செய்கிற பிரசங்கங்கள் முப்பத்தெட்டாவது அத்தியாயம் முதல் 42-ஆம் அத்தியாயம் வரையில் தொடர்ச்சியாக இருக்கின்றன. இந்தப் பிரசங்கங்களில் ஆசிரியராகிய வேதநாயகம் பிள்ளையே தம்முடைய கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். தனியே கட்டுரை யாக எழுதினால் படிக்க மாட்டார்களென்றோ, அப்படி எழுதும் எண்ணம் இல்லாததனாலோ இந்த நாவலினிடையே சேர்த்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த அறிவுரைகள் இது ஒரு நாவல் என்ற எண்ணத்தையே மறக்கச் செய்கின்றன; அலுப்பை உண்டாக்குகின்றன.

நாவல்களைப்பற்றிய திறனாய்வாளர் யாவரும் பிரசாரம் நாவலின் இலக்கணத்துக்கு மாறுபட்டது என்று வற்புறுத்திச் சொல்கிறார்கள். ஆசிரியன் தன் கருத்தை இலை மறை காய்போலப் பாத்திரங்களின் வாயிலாகச் சொன்னால், அது தனியாக நில்லாமல் பாத்திரத்தின் குணசித்திரத்தோடு இழைந்து நிற்கும். அப்படியின்றி எதையாவது சாக்காக வைத்துக்கொண்டு ஆசிரியன் ஒரு சொற்பொழிவு மேடையை இடையில் அமைத்துக் கொள்வது தவறு. 'உரையாடல், ஆசிரியன் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தும்