பக்கம்:தமிழ் நூல்களில் பௌத்தம்.djvu/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

தமிழ் நூல்களில் பௌத்தம்

ஒவ்வொன்றும் இச்சமரச சன்மார்க்கத்தையே அறிவுறுத்துகிறதென்பது எனது கொள்கை. ஆகவே, யான் எச்சமயத்தையும் போற்றுவேன்; எச்சமயக் கூட்டத்துக்குஞ் செல்வேன். எனக்குச் சமயவேற்றுமை யென்பது கிடையாது. எச்சமயப் பெயராலாதல் சன்மார்க்கத் தொண்டு நிகழல் வேண்டுமென்பது எனது உட்கிடக்கை.
இக்கொள்கையுடைய அடியேனைத் தென்னிந்திய பௌத்தசங்கச் சார்பாகச் சென்னைச் "சிந்தாதிரிப்பேட்டை ஹைஸ்கூல்" நிலையத்தில் 1928 வருடம் ஏப்ரல்மீ 6உ, அறிஞர் இலட்சுமிநரசு நாயுடு அவர்கள் தலைமையின் கீழ்க் கூடிய தென்னிந்திய பௌத்த மகாநாட்டில், "தமிழ் நூல்களில் பௌத்தம்" என்னும் பொருள் பற்றிப் பேசுமாறு, அச்சங்கத்தார் பணித்தார். அப்பணி மேற்கொண்டு, ஆண்டுப் போந்து, அடியேன் நிகழ்த்திய விரிவுரையே இந்நூலின் உள்ளுறை.
"தமிழ் நூல்களில் பௌத்தம்" என்னும் பொருள் ஒரு மணி காலப் பேச்சில் அடங்குவதன்று. அஃது ஒரு விரிந்த நூலுக்குரிய பொருள். அதை எங்ஙனம் ஒரு மணி நேரத்துள் அடக்குவது? அவ்வொரு மணி நேரத்தில் குறித்துப் பேச எண்ணிய சில பொருளுள்ளுஞ் சில விடுபட்டன. அவைகளுள் இன்றியமையாத இரண்டொன்றை இம்முன்னுரையில் பொறித்துளேன். இது கருதியே முன்னுரை சிறிது விரிவாக எழுதப்பட்டது.
சொற்பொழிவு நூல்வடிவம் பெற்றமையான், அதற்குரிய சிற்சில மாறுதல்கள் செய்யப்பட்டன. புது மாறுதலொன்றும் பெரிதுஞ் செய்யப்படவில்லை. இந்நூலால் சமரச சன்மார்க்க உணர்வு நாட்டிடைப் பரவுதல் வேண்டு மென்பது எனது வேட்கை.

சென்னை
இராயப்பேட்டை திரு. வி. கலியாணசுந்தரன்
16-2-1929