பக்கம்:தமிழ் நூல்களில் பௌத்தம்.djvu/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
க. தொல்காப்பியம்

பழந் தமிழர்
தமிழ் மொழியில் இப்பொழுது கிடைத்துள்ள பழைய நூல்களுள் மிகத் தொன்மையது தொல்காப்பியம். தொல்காப்பியக் காலம் தூய பழந்தமிழ்க் கால மென்று சொல்லமுடியாது. அந்நூற்கண் ஆரியக் கலப்புஞ் சிறிது உண்டு. ஆனால் அந்நூல் பழந் தமிழர் வழக்க ஒழுக்கங்களையே பெரிதும் அறிவுறுத்துகிறது. தொல்காப்பியத்தைக் கொண்டு தூய பழந்தமிழர் வழக்க ஒழுக்கங்களை ஒருவாறு ஊகித்துக் கொள்ளலாம்.
காலம்
தொல்காப்பியக் காலம் பலரால் பலவாறு கணிக்கப் பட்டிருக்கிறது. அக்காலத்தைப் பற்றிய கருத்து வேற்றுமைகள் பல உண்டு. இதுகாறும் ஆராய்ச்சிக்காரர் கண்டமுடிபுகளை நோக்குழித் தொல்காப்பியக்காலம் இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னையதா யிருத்தல் வேண்டும் என்று அறுதியிட்டுக் கூற இடம் பெறுகிறது. தொல்காப்பியம் மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பிற்பட்டது என்று ஆராய்ச்சித் துறையில் கைபோய அறிஞர் எவருங் கூறியிருக் கின்றனர் என்று தெரியவில்லை. எனவே தொல்காப்பியம் புத்தர் பெருமானார் இவ்வுலகிடைப் பிறப்பதற்கு முன்னரே தோன்றிய ஒரு நூல் என்பது கவனிக்கத்தக்கது.
தமிழ் நாட்டெல்லை
தொல்காப்பியப் பாயிரத்தில் தமிழ்நாட்டின் எல்லை குறிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் வட எல்லை 'வேங்கடம்' என்று அப் பாயிரங் கூறுகிறது. தமிழ்நாட்டின் தெற்கு வரம்பைப்பற்றி ஈண்டுக் கருதவேண்டுவதில்லை. ஈண்டு வேண்டற்பாலது வடக்கு வரம்பு ஒன்றே. வேறு பல சான்றுகளான் தமிழகத்தின் வட எல்லை விந்தியம் என்றுந் தெரிகிறது. தமிழகத்தின் அவ்வெல்லையை 'இமயம்வரை ' என்று சொல்வோருமுளர்.
ருக் வேதம்
ஆரியமக்கள் இந்தியா புகுமுன்னரே இந்தியாவில் நாகரிகத்திற் சிறந்த மக்கள் வதிந்தார்கள் என்பது ருக்