பக்கம்:தமிழ் நூல்களில் பௌத்தம்.djvu/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

தமிழ் நூல்களில் பௌத்தம்

என்று போற்றினார்கள். அம்மக்கள் தங்கள் கண்ணுக்குப் பச்சைப்பசேலெனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கையழகை மால் என்று வழுத்தினார்கள். அவர்கள் மருதநிலத்தில் குடி புகுந்த போது, அங்கே பெரிதும் தங்கள் இனமாகிய மக்கள் கூட்டத்துடன் நெருங்கி நெருங்கிப் பழக நேர்ந்தமையான், மக்கள்மாட்டொளிரும் இறைமை என்னும் இயற்கை அழகைக் கண்டு அதை வேந்து என்று கொண்டார்கள். அவர்கள் கடற்கரை நண்ணிய போது கடலின் இயற்கையழகை வண்ணம் என்றார்கள். பழந்தமிழ் மக்கள் அவ்வந்நில இயற்கை அழகுக்கிட்ட பெயர்களே சேய் மால் வேந்து வண்ணம் என்பன. இவை யாவும் இயற்கை அழகெனும் ஒன்றையே குறிப்பனவாம். இதுகுறித்து "முருகன் அல்லது அழகு" என்னும் நூலில் சிறிது விரித்துக் கூறியிருக்கிறேன்.
இவ்வியற்கை அழகுப் பெயர்கள் தொல்காப்பியனார் காலத்திலேயே அன் விகுதி பெறலாயின. பின்னை நாளடைவில் இப்பெயர்கள் பிரிவுபட்ட கடவுளராகச் சமய வாதிகளால் கொள்ளப்பட்டன. பழந் தமிழ் மக்கள் கொண்ட கடவுள், இயற்கை அழகு என்பதை மட்டும் நாம் மறத்தலாகாது.
கந்தழி
கந்தழி என்னும் மற்றுமொரு பெயர் தொல்காப் பியத்திலிருக்கிறது. இது பழந்தமிழ் மக்களின் கடவுள் பெயர் என்றும் வழங்கப்படுகிறது. கட்டற்ற ஒன்றே கந்தழி என்று சொல்லப் படுகிறது. அழுக்காறு அவா வெகுளி பகைமை முதலிய கட்டுகளைக் கடந்த நிலையே கந்தழி என்பது.
வீடு
தொல்காப்பியத்தில் வீட்டைப்பற்றி விளக்கமான உரைகள் உண்டா என்பது பெரிதுங் கூர்ந்து கூர்ந்து உன்னத் தக்கது. தொல்காப்பியத்தில் அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றே விளங்க ஓதப்பட்டிருக்கின்றன.