பக்கம்:தமிழ் நூல்களில் பௌத்தம்.djvu/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தொல்காப்பியம்

13

ஈண்டுக் கிளத்திய இவ்விரண்டொரு குறிப்புக்களைக் கொண்டு பழந்தமிழர்களின் சமய நிலையை நீங்கள் அளந்து கொள்ளலாம்.
உயர்வு தாழ்வு
பழந்தமிழர்களிடம் பிறப்பில் உயர்வு தாழ்வு குறிக்கும் சாதி வேற்றுமை கிடையாது. சாதி யென்னுஞ் சொல்லே தமிழ்ச் சொல்லன்று. பெண் மக்கள் உரிமை பழந் தமிழர்களிடை ஆட்சியிலிருந்தது. பிறவற்றை விரிக்கிற் பெருகும். ஆரியர் வருகைக்கு முன்னே - புத்தர் பெருமான் பிறத்தற்கு முன்னே - தமிழ்மக்கள் நிலை இவ்வாறிருந்தது.

புத்தர் காலமும் நாட்டு நிலையும்

இனி மற்றுமுள்ள தமிழ் நூல்களைத் தொடுதற்கு முன், புத்தர் பெருமான் அறநெறி குறித்து இரண்டோர் உரை பகர விரும்புகிறேன். புத்தர் பெருமான் அறநெறி புதுக்க நுழைந்ததற்குக் காரணம் யாது? அறநெறியின் வீழ்ச்சியே காரணமாகும். அக்காலத்தில் கடவுள் பெயரால், சமயத்தின் பெயரால், வேள்வியின் பெயரால் உயிர்க் கொலைகள் நிகழ்த்தப்பட்டன; குடி பெருகலாயிற்று; மக்களுக்குள் பிறப்பால் உயர்வு தாழ்வு வகுக்கப்பட்டன. மக்களுக்குள் பூசுரர் என்றொரு கூட்டத்தார் கிளம்பினர். அவர்கள் மன்னர்களைத் தங்கள் வயப்படுத்தி மற்ற மக்களை அடிமைப்படுத்திக்கொண்டார்கள். கொலையுங் குடியுஞ் சாதிக் கொடுமையும் யாண்டுங் கடவுள் நெறியாகக் கருதப்பட்டன என்று சுருங்கச் சொல்லலாம். இக்கொடுமைகளை யொழிக்கவே புத்தர் பெருமான் அறக்கிளர்ச்சி செய்து வெற்றி பெற்றார். புத்தர் பெருமான் முயன்று உண்மை ஞானம் பெற்று அறநெறியை அறிவுறுத்த லானார். யாகங்களில் கொலை செய்தல், பிறப்பில் உயர்வு தாழ்வு கருதல் முதலிய கொடுமைகளைத் தொலைத்து, யாண்டும் ஜீவகாருண்யம் சீலம் சமரசம் முதலிய அறங்களை அவர் ஓம்பிவந்தார். இக்கொள்கைகள் மேலே குறிப் பிட்ட பழந்தமிழர் கொள்கைகளுடன் எவ்வளவு தூரம் அரண் செய்கின்றன என்று நீங்களே நினைந்து பாருங்கள்.