பக்கம்:தமிழ் நூல்களில் பௌத்தம்.djvu/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உ. பத்துப்பாட்டு முதலியன

ஆரியமும் பௌத்தமும்
இனிப் பத்துப்பாட்டு முதலிய நூல்களின்மீது நோக்கஞ் செலுத்துவோம். இந்நூல்களின் காலத்தில் புத்தர் பெருமான் அறநெறி தென்னாட்டில் பரவிற்று. இந்நெறி பரவுதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆரியருடைய வழக்க ஒழுக்கங்கள் தமிழ்நாட்டில் பரந்து விளையாடி நிலை பெற்றன. ஆரியக் கலப்பு, தொல்காப்பியனார் காலத்திலேயே நேர்ந்ததென்று மேலே சொல்லி யிருக்கிறேன். தமிழ் மக்களிற் பலர் ஆரியருடைய வழக்க ஒழுக்கங்களில் தோய்ந்து கிடந்தார். அவ்வாறு கிடந்த தமிழ் மக்களிடைப் புத்தர் பெருமான் அறவொளியும் படரலாயிற்று. இதை வலியுறுத்த இந்நூல்களில் பல சான்றுகளிருக்கின்றன. ஒவ்வொரு நூலாக எடுத்துச் சான்றுகள் காட்டிச் செல்லக் காலவரை இடந்தாராது. தொகுப்பாகச் சிற்சில கூறிச் செல்கிறேன்.
கலம்பகம்
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்குகளில் கொலை, கொல்லாமை, கள்ளுண்ணல், கள்ளுண்ணாமை, ஊன் வேள்வி, ஊனமில் வேள்வி, பௌத்தப் பள்ளிகள் மற்றச் சமயக் கோயில்கள், பல கடவுளர் வழிபாடுகள் முதலியன சொல்லப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு அந்நாளில் பெருங் கலம்பகமாயிருந்தது என்று சுருங்கச் சொல்லலாம். ஆனால், அக்கலம்பகத்தால் கலகம் விளையவில்லை.
நாலடியாரும் திருக்குறளும்
நாளடைவில் புத்தர் பெருமான் அறநெறியே நாட்டில் ஓங்கி வளர்ந்தது. பதினெண்கீழ்க்கணக்கின்பாற்பட்ட நாலடியாரும் திருக்குறளும் இக்கருத்தை உறுதிப்படுத்தும். நாலடியாருந் திருக்குறளும் ஊன் வேள்வியையுங் கொலையையும் எவ்வளவு உரமாகத் தடிந்திருக்கின்றன என்று விரித்து உரைக்கவேண்டுவதில்லை. இதனால் விளங்குவதென்னை? புத்தர் பெருமான் செந்நெறியின் வெற்றியே விளங்குகிறது.