பக்கம்:தமிழ் நூல்களில் பௌத்தம்.djvu/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தமிழ் நூல்களில் பௌத்தம்

முன் கிளத்த நேரமில்லை. இரண்டொரு குறிப்பை மட்டும் உங்கள் முன் கிளத்துகிறேன். சீதா தேவியாரை இராவணன் தூக்கிச் சென்ற முறையை வான்மீகி எவ்வாறு சொல்லியிருக்கிறார்? கம்பர் எவ்வாறு சொல்லியிருக்கிறார்? சகோதரிகளே! சகோதரர்களே! சிந்தியுங்கள். பெண்ணை இழிவுபடுத்தக் கம்பர் நெஞ்சம் எழவில்லை. இம்மாற்றத்துக்குக் காரணம் யாது? கம்பர் உளத்திற் புகுந்துள்ள தமிழ் பௌத்த அறமேயென்று யான் சொல்வேன். மற்றுமொன்று கூற விரும்புகிறேன். வான்மீகி இராமாயணம், இராமன் சீதை முதலியோர் புலால் உண்டதாக உரைக்கிறது. கம்பராமாயணம் அங்ஙனம் அறையவில்லை. இதற்கு என்ன காரணம்? மேற் சொற்ற காரணமே. பௌத்த அறம் தமிழ் நூல்களில் புகுந்து செய்யும் நலத்தை என்னென்று நவில்வேன்?

------
சு. புராணங்கள்

இனிப் புராண காலத்தின் மீது புந்தி செலுத்துவோம். புராண உலகத் தோன்றிய காரணத்தை உற்று நோக்கல் வேண்டும். புராண உலகத் தோற்றத்துக்குக் காரணமாக நின்றது பௌத்த மதமேயாகும். சாதாரண மக்கட்குப் பௌத்த தர்மம் பயன்படும் பொருட்டுப் புத்தர் ஜாதகக் கதைகள் எழுதப்பட்டன. அவைகள் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தன. கதைகள் பெரும் பான்மையோர் நெஞ்சைக் கவர்வது இயல்பு. ஜாதகக் கதைகளால் விளையும் பயன்களைக் கண்ட ஆரியர்கள் புராணக் கதைகளை எழுதினார்கள். அப்புராணங்கள் பின்னே தமிழுலகிலும் புகுந்தன. புராணக் கதைகள் அவ்வக்கால மக்கள் மனோநிலைக் கேற்றவண்ணம் புனையப்படுவன. ஆதலால், கதைகளின் அமைப்பு எங்ஙன மாயினுமாக. அப்புராண உலகம் பெளத்த தர்மத்தை ஏற்றுக்கொண்டதா இல்லையா என்பதே ஈண்டு வேண்