27
டற்பாலது. புராணங்களில் கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறுமை, இரக்கம், தவம், அன்பு, அறிவு, மெய் என்னும் எட்டு மலர்களை அடிப்படையாகக் கொண்ட கதைகள் பல காணலாம். முப்பத்திரண்டு அறங்கள் யாண்டிருந்து முளைத்தன? உயிர்கட்கு உதவல் என்னுங் கருத்துக்கே பிறப்பிடம் பௌத்த மதமென்று நான் உறுதியாக நம்புகிறேன். அக்கருத்து, பின்னே பல சமயங்களில் நுழைந்தது. கொல்லாமை ஜீவகாருண்யம் முதலியன எங்கெங்குள்ளனவோ ஆங்காங்கெல்லாம் பௌத்த தர்மமுண்டெனக் கொள்க. புராணங்களில் அறவொழுக்கப் பாக்கள் அளவின்றிக் கிடக்கின்றன. அவை யாவும் பௌத்த மதத்தின் செல்வாக்கைக் குறிப்பன என்பது எனது உள்ளக்கிடக்கை.
"தருமமே யுலகம் போற்றச் சகலகா ரணம தாகுந்
தருமமே யழியா தென்றுந் தாபர மாகி நிற்குந்
தருமமே தனைவேட் டோர்க்குச் சவுக்கிய மனைத்து நல்குந்
தருமமே முத்தி சேருஞ் சாதன மென்றுட் கொள்வான்"
இப்புராணப் பாடல்களை நோக்குக. அறவொழுக்கத்துக்கு மாறுபட்ட புராணங்களுஞ் சிலவுண்டு. அவை அறம் பொலியாத நெஞ்சுடைய மறவோரால் எழுதப் பட்டன என்று யான் சொல்வேன்.