பக்கம்:தமிழ் நூல்களில் பௌத்தம்.djvu/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எ. பிற்பட்ட நூல்கள்

பிற்பட்ட நூல்களின் பெயர்களில் சிலவற்றை யாதல் குறிப்பிடவும் அஞ்சுகிறேன். குறிக்கப்பெற்ற காலவரை நெருங்கிவிட்டது. தாயுமான சுவாமிகள், இராமலிங்க சுவாமிகள் முதலியவர்கள் பாக்களில் புத்தர் பெருமான் எழுந்தருளியிருத்தல் கண்கூடு.

"கொல்லாமை எத்தனைக் குணக்கேட்டை நீக்கும்"

"கொல்லா விரதங் குவலய மெல் லாமோங்க
எல்லார்க்குஞ் சொல்லுவ தென்னிச்சை பராபரமே"

"கொல்லா விரதமொன்று கொண்டவரே நல்லோர்மற்
றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே"

"எல்லாரு மின்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே"

"கொலைகளவு கட்காமங் கோபம் விட்டாலன்றோ
மலையிலக்கா நின்னருள் தான் வாய்க்கும் பராபரமே"

எனவரூவுந் தாயுமானார் திருவாக்குகளை நோக்குக. அவைகளில் பௌத்த தர்மம் தாண்டவம் புரிவதைக் காண்க.
இராமலிங்க சுவாமிகள் ஆண்டவனை "அருகர் புத்தராதி என்பேன்" என்று, வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்கள். அக் கருத்தடங்கிய பாடல் வருமாறு:

"பெருகியபே ரருளுடையா ரம்பலத்தே நடிக்கும்
பெருந்தகையென் கணவர் திருப் பேர்புகலென் கின்றாய்
அருகர் புத்த ராதியேன்பேன் அயனென்பே னாரா

யணனென்பேன் அரனென்பேனா திசிவ னென்பேன்
பருகுசதா சிவமென்பேன் சத்திசிவ மென்பேன்
பரமமென்பேன் பிரடிமென் பேன் பரபிரம மென்பேன்
துருவுசுத்த பிரமமென்பேன் துரிய நிரை வென்பேன்
சுத்தசிவ மென்பனி வை சித்து விளை யாட்டே"