பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

தமிழ் நூல் அறிமுகம்

தறிந்து புலவர் பாடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார். தன் விருப்பத்தைச் சங்கத்தில் இருந்த புலவர்களுக்குத் தெரிவித்தபோது அவர்கள் பாடினார்கள். அந்தப் பாடல்களால் அரசன் மனநிறைவு பெறவில்லை. அப்போது, ஆலவாய்ப் பெருமானைப் பூசிக்கும் தருமி என்ற ஆதிசைவர், தமக்குத் திருமணம் செய்து கொள்ளப் பணம் வேண்டுமென்று இறைவனிடம் விண்ணப்பித்துக் கொண்டார். இறைவன், ‘கொங்குதேர் வாழ்க்கை’ எனத் தொடங்கும் பாட்டை எழுதி,தருமியிடம் அளித்து, அதைப் பாண்டியனிடம் கொடுத்து, அவர் அளிக்கும் ஆயிரம் பொன்னைப் பெற்றுத் திருமணம் செய்து கொள்ளும்படி அருளினார். தருமி, பாண்டியனிடம் அதைக் காட்ட, அரசன் கிழியை எடுத்துக் கொள்ளும்படி சொன்னார். சங்கமண்டபத்தின் முன் தொங்கிய கிழியைத் தருமி அறுக்கச் சென்றபோது நக்கீரர் தடுத்து, பாட்டில் குற்றம் உண்டென்று சொன்னார். தருமி, இறைவனிடம் சென்று முறையிட, இறைவனே புலவர் கோலம் பூண்டு வந்து நக்கீரரோடு வாதிட்டார். நக்கீரர், ‘பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் இல்லை’யென்று மறுக்க, இறைவன் நெற்றிக் கண்ணைக் காட்டினார். உடல் வெதும்பிய நக்கீரர், தம் பிழையை உணர்ந்து வருந்தி னார். பிறகு காளத்தி சென்று பொன் முகலியில் நீராடிப் பழைய மேனி பெற்று மதுரை வந்தார்.

தருமியிடம் ஆலவாய் இறைவன் பாடி அளித்த பாட்டு இது;

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி,
காமம் செப்பாது கண்டது மொழிமோ;
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோநீ யறியும் பூவே?”