பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. சிறு பஞ்ச மூலம்

மருத்துவர்கள் வழங்கும் மருந்துகளையும் மருந்துச் சரக்குகளையும் நினைப்பூட்டும் நூல்கள் மூன்று பதினெண் கீழ்க்கணக்கில் இருக்கின்றன. திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், ஏலாதி என்பன அவை. சிறு பஞ்ச மூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்ற பொருள் உடையது. பெரிய வேர்கள் ஐந்து உண்டு அவற்றைப் பெரும் பஞ்ச மூலம் என்பர் மருத்துவ நூல் உணர்ந்தவர். சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்: கண்டங்கத்திரி வேர் என்னும், ஐந்தும் சிறு பஞ்ச மூலம். பில்வவேர், பெருங்குமிழ் வேர், தழுதாழை வேர், பாதிரி வேர், வாகை வேர் என்னும் ஐந்தும் பெரும் பஞ்ச மூலம்.

சிறு பஞ்ச மூலம் போல ஒவ்வொரு பாட்டிலும் ஐந்து ஐந்து நீதிகளைச் சொல்வதனால் சிறு பஞ்ச மூலம் என்று பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள ஒரு நூலுக்குப் பெயர் அமைந்தது.

இந்த நூலின் ஆசிரியர் காரியாசான் என்பவர். அவர் பெயர் காரி என்றும் அவர் ஆசிரியர் என்றும் அந்தப் பெயரால் தெரிந்து கொள்ளலாம். அவருடைய ஆசிரியர் மதுரையில் தமிழாசிரியராக இருந்த மாக்காயனார் என்பவர்.