பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

213

ன்றது. பின்னர் கி. பி. பதினெட்டா நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்த அரபத்தநாவலர் என்பார் ‘பாதசாஸ்திரம்’ என்றதோர் நூல் செய்துளர்.

நாடகசாலையை உலகத்தின் பிரதிவிம்ப மென்றெண்ணி ஆங்கு நடித்துக் காட்டப் படுவவற்றுள் தமக்கு வேண்டிய நற்பகுதிகளைமட்டி லேற்றுப் போவதே நன்மக்க ளியல்பு. உழைத்த உள்ளத்திற்கு இன்பம் தந்து ஊக்கம் விளைவிப்பன நாடகங்களே. சிற்சிலர் அறிவு திரிந்து வேறுபட்டாராயின் அஃது அவரது இயற்கைத் தன்மைகளு ளொன்றாமே யன்றி நாடகத்தால் விளைந்த செயற்கைத் தன்மையன்றாம். தவறுள்ள விடத்திலன்றே திருத்தம் வேண்டும்? புண்ணுள்ள விடத்திலன்றே சிகிச்சை செய்யப்படும்? மக்கள் சிலர் தமது தீக்குணத்தால், நாடகசாலை சென்றும் நாடகங்கள் படித்தும் கெட்டா ராக அதனைக் காகதாலியமாய் நாடகத்தின் தலையிலேற்றி, நாடகத்தமிழே தீதென்று கடிதல் எவ்வாறு ஏற்புடைத்தாகும்? காரணமொரு புறத்திலிருப்ப, அதனைக்கண்டு பரிகரிக்கமாட்டாது மயங்கிக் காரணமல்லாதவற்றைக் காரண மென்று கூறுதல் தருக்க நூற் குற்றமன்றோ?

“நீயுந் தவறில்லை நின்னைப் புறங்கடைப்
போதர விட்ட நுமருந் தவறிலர்
நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்
பறையறைந் தல்லது செல்லங்க வென்னா
விறையே தவறுடை யான்”

என்று ‘குறிஞ்சிக்கலி’யிற் கூறியதனை யொக்கும், இவரது செயல்.

இது நிற்க, சென்ற சில்லாண்டுகளாக, நாடகத்தமிழ் அறிவுடையோர் சிலரது உதவிகொண்டு தலையெடுத்து வளரா நின்றது. இதற்கு வடமொழி நாடகப்பயிற்சியும் ஆங்கில நாடகப் பயிற்சியும் மிகப் பயன்படுவனவாயின. இவ்வாறு புதுவழியிற் புனையப்பட்டு வெளிப்படும் நாடகங்கள் இன்னும் அதிகரித்தல் வேண்டும். இவற்றை யொழுங்கு படுத்துதல் கருதி, யாம் ‘நாடகவியல்’ என்றதோர் இலக்கண நூல் செய்திருக்கின்றனம்.

இனிச்சிலர் ‘நாடகம்’ என்ற சொல் வடசொல்லாதல் கண்டு, ஆரியரொடு கலந்த பின்னரே தமிழர்களிடத்தில் நாடகத்தமிழ் ஏற்பட்டிருத்தல் வேண்டுமென்கின்றனர். இக்கூற்று வடமொழியில் ‘வாய்’ என்பதற்குத் தக்க சொல்லில்லாமையால் வடமொழியாளர்க்கு வாயில்லை யென்பது போலும். அஃதன் றியும் ‘கூத்து’ என்ற சொல்லே ஆதியில் தமிழர்கள் வழங்கியது; கூத்தென்பது பொது; நாடக மென்பது சிறப்பு. கூத்துப்பலவற்றுள், நாடகமென்பது கதை தழுவிவரும் கூத்து, எனவே நாடகமென்ற சொல்வழக்கின் முன்னரே, நாடகத் தொழில் வழக்கும், நாடக நூல் வழக்குந் தமிழர் மாட்டுண்டென்பது பெற்றாம்.

மூவகைப் பாகுபாடு முற்றிற்று.