பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

241

சூடி’, ‘கொன்றை வேந்தன்,’ ‘மூதுரை’ என்ற நூல்களெல்லாம் இக்காலத்தனவாம். இனி கடைச்சங்கப் பிற்காலத்தைப்பற்றிப் பேசப் புகுவாம்.

II. இடைக்காலம்: (1) முற்பகுதி.

இது கடைச்சங்கப் பிற்காலமாம்; கி.பி. 100 முதற் கி.பி. 600 வரையிலுள்ளது. இக்காலத்திலே தான் ஐம்பெருங் காப்பியங்களு மெழுந்தன. அவைதாம் ‘சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டல கேசி’ என்பனவாம். இவற்றுட் சிலப்பதிகார மணிமேகலைகள் சிந்தாமணிக்கு முன்னரே யாக்கப்பட்டிருத்தல் வேண்டும். இவ்வைந்தனுள் முதல் மூன்றும் அச்சேறிவிட்டன. ‘நீலகேசி, சூளாமணி, யசோதாகாவியம், நாககுநமார காவியம், உதயணன் கதை’ என்ற ஐந்து சிறு காப்பியங்களும் இக்காலத்தனவாம். இவற்றுட் ‘சூளாமணி’ ஒன்றே வெளிவந்துளது. இப்பதின் காப்பியங்களும் நவரசங்களோடு கூடிய கற்பனாலங்காரங்களும் அரியபெரிய நீதிகளும் இனிது காட்டி விளங்குவனவாம். பேரின்பக்கடலுள் திளைந்து விளையாடிய மணிவாசகப் பெருமான் வாய் மலர்ந்தருளிய ‘திருவாசகம்’ என்ற உயரிய நூலும் இக் காலத்தததே. இது பத்திச் சுவை யொழுகசி சிவபெருமானைப்பாடியதோரரிய நூலாம். இவர் செய்தருளிய ‘திருச் சிற்றம்பலக் கோவையார்’ என்னும் திவ்யப் பிரபந்தம் அகப் பொருட்டுறைகளா லமைந்ததெனப் புறத்தே தோன்றினும், அது சிற்றின்பக் கருத்தும் பேரின்பப்பொருளும் ஒருங்கே பயப்பதாம்.

“ஆரணங் காணென்ப ரந்தணர் யோகிய ராகமத்தின்
காரணங் காணென்பர் காமுகர் காமநன்னூல தென்பர்
ஏரணங் காணென்ப ரெண்ண ரெழுந்தென்ப ரின்புலவோர்
சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே.”

‘மேருமந்தர புராணம்’ என்ற சைன நூலும் இக்காலத்ததே. ‘திவாகரம்,’ ‘பிங்கலம்,’ என்ற நிகண்டுகளும் ‘அணியியல்’ என்ற அலங்காரநூலும் இக்காலத்திற் செய்யப்பட்டனவே. சேரசோழ பாண்டியர் மூவரையுந் தனித்தனி தொள்ளாயிரம் பாடல்களாற் சிறப்பித்துக்கூறும் ‘முத்தொள்ளாயிரம்’ என்ற நூலும் இக்காலத்திலே தான் யாக்கப் பட்டிருத்தல் வேண்டும். இதிற் சிற்சில பகுதிகள் காணப்படுகின்ற அத்துணையல்லது நூல் முழுதுங் காணப்பட வில்லை. ஆழ்வார்களுட் சிலர் இக்காலத்திருந்திருக்கலாம். ஆகவே யன்னாரது பிரபந்தங்களுட் சில இக்காலத்தன வாகலாம். இதுகாறுங் கடைச்சங்கப் பிற்காலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இனி இடைக்காலத்தின் பிற்பகுதியைப்பற்றிப் பேசுவாம்.

(2) பிற்பகுதி: இது கி.பி. 600 முதற் கி.பி. 1400 வரையிலுள்ளது. இவ்விடைக் காலத்திலேதான் சமய சாஸ்திர நூல்க ளெழுந்தன. சைனர் பௌத்தர் முதலாயினார் மிக்கிருந்தமை பற்றியும் சாமானிய ஜனங்கள் அன்னார் வயப்படுகின்றமை பற்றியும் சைவசமயத்திலும் வைணவ சமயத்திலும் முறையே நாயன்மார்களும் ஆழ்வார்களுந் தோன்றித் தத்தம் சமயஸ்தா

31