பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

117

தெளிந்த சித்தாந்த அறிவு பெற்று யாவராலும் புகழத்தக்க நிலையில் இன்றும் உள்ள பெரியார்களாம் அவ்விருவரையும் பற்றி மட்டும் குறிப்பிடலாயிற்று.

நம் ஐந்தாம் குருநாதர் பட்ட மேற்பதற்கு முன், இரு குருமார்கள், தக்க கவனம் செலுத்தாக் குறையால் ஆரணி கோயில், சத்திரம், இவற்றின் தொடர்புகள் இம் மடாலயத்திற்கு இல்லையாகும் என்ற நிலை வந்துற்றது. நம் குருநாதர், அறச்சார்பிற் குரியதாய் ஆன்றோர்களால் அமைக்கப் பெற்ற நிலையங்களும், அவற்றிற்கென நியமிக்கப் பெற்ற சொத்துகளும் பிறர் வயப்பட ஒரு போதும் சகியாதவர்கள். எனவே, ஆரணி தொடர்பான சொத்துக்களின் பேரில் வழக்கிடவும் பின் வாங்கினார்களல்லர். வேலூர் நீதி மன்றத்தில் வழக்கெழுந்தது. வக்கீலாக வேலூர் தென்னை மரத்துத் தெருவில் பெயர்பெற்று விளங்கிய திரு. இராசவேல் முதலியாரவர்களை யமர்த்தினார்கள்.

முன் ஆரணி முருகன் கோயிலில் பூசனை புரிந்து கொண்டிருந்த சிவாசாரியர், அந்தக் கோயில் தனக்கே உரியதென்றார். பற்பல தலைமுறைகளாகத்தம்முன்னோர்களும் உரிமை கொண்டேயிருந்தார்கள். ஆதலால் முறைப்படி தனக்கே அஃது உரியதாகும் என்பது வழக்கு. யாவும் விசாரித்து முடியும் நிலையில் நம் சுவாமிகளது தெய்வத் திருவுள்ளத்தில் எழுந்தது ஒர் எண்ணம்; ஆங்கு எழுந்தருளும் திருவுருவம் முருகப்பெருமானே என்றாலும், அவருடைய முடியில் சிவலிங்கக் குறியும் இருக்கிறது. இத்தகைய திருவுருவங்களே இம் மடாலயத்தைச் சேர்ந்த இடங்களில் விளங்குபவை. ஆகவே, இது வீரசைவராம் எமக்கே உரியது; பூசனை புரியும் ஆதி சைவர் அவருடைய முன்னோர் வழக்கப்படி பூசிப்பவரே; அவருடைய முன்னோர் எம் முன்னோராகிய மடாலய குருமூர்த்திகளால் நியமிக்கப் பெற்றவரே எனத் தெள்ளத் தெளியச் செய்திகளை முறைப்படுத்தி வக்கீலுக்கு அறிவித்தார்கள். அவரும் அம்முறையினைப் பின்பற்றி வாதாடி இறைவன் திருவுருவங்களில் சிவலிங்கக் குறியும் அமைந்திருக்கும் சிறப்பினைக் காட்டி வெற்றிக்கு வழி தேடினார்கள். பிறகு வழக்குவென்றது. கோயிலும், பிற சொத்துகளும் மடாலயத்திற்கே உரிமையுடையவாயின.

ஆரணி மடாலயத்தைச்சேர்ந்த இடம் ஒன்றில் சிலர் வாரந்தோறும் சிறப்பாகப் பஜனை புரியவெனச் சிறு இடம் கேட்டபோது, சுவாமிகள் மறுக்காது ஒப்புக் கொண்டனர்.