பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/153

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

வல்லிக்கண்ணன்

போற்றினர். காரைக்குடியில் செட்டிமார் ஆதரவில், பராசக்தி அம்பலவாண நாவலர் என்பார் ஒருவர் இருந்தார். அவர், சுவாமிகளது கல்வியறிவாற்றல்களிற் காழ்ப்புக் கொண்டு, செட்டிமாரது அளவுகடந்த உபசாரத்துக்கு மறைமுகமாகத் தடை சூழ்ந்தார். அடிகளாரது பெருந்தன்மை காரணமாக அது பயனற்றுப் போய்விட்டது.

காரைக்குடி மக்கள் தொழுது போற்ற மேலும் வழிக்கொண்டருளி, தேவகோட்டை, திருக்கானப்பேர், தொண்டி, இராமநாதபுரம் ஆம் தலங்களைத் தரிசித்துக்கொண்டு இராமேச்சுரம் எழுந்தருளுங்கால், பாம்பன் இரயில்வே பாலம் வழியாகச் சுவாமிகளுக்காக, மேனாவுடன் செல்லவும் மீண்டு வரவும் அனுமதி வழங்கப்பெற்று, இராமநாதனைப் பாடிப் பரவித் தொழுது சில நாள் தங்கி, தனுக்கோடி முதலாம் துறைகளிலும் நீராடி மீளவும் வழிக்கொண்டார்கள்.

உத்தரகோசமங்கை, சாயர்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரப் பட்டினம், உடன்குடி, ஆற்றூர், ஆறுமுக மங்கலம், திருவெள்ளூர், திருநெல்வேலி, திருப்புடைமருதூர், அம்பாச முத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரம சிங்கபுரம், கோட்டாறு ஆம் தலங்களை வழிபட்டனர். கோட்டாற்றில் சில நாள் தங்கிச் செஞ்சொல்மாரி பொழிந்தனர். வேலாயுத முதலியார் என்னும் அன்பர் ஒருவர், அடிகளார் திருவுருவத்தைப் பல படியாக எழுதுவித்து, அவற்றைத் தன் காணிக்கையாகச் சுவாமிகளிடம் ஏற்பித்தார். அவைகளுட் சில, இன்றும் உள. பின்னும் அடிகளார், பெருவளம், வடசேரி, வடுவீச்சரம், களக்காடு, கடையம், தென்காசி, திருக்குற்றாலம், தென் இலஞ்சி, புளியங்குடி, சங்கர நாராயணர் கோயில், கழுகு மலை, சாத்தூர், விருதுப்பட்டி ஆம் தலங்களைத் தரிசித்துக் கொண்டு, மதுரையடைந்து ஆங்குச் சில பகல் தங்கித் திருபரங்குன்ற நாதனையும், தேவயானை மணாளனையும் கண்டு வணங்கினார்கள். அங்கிருந்து வழிக்கொண்டு பழநியடைந்து, பவரோக வயித்தியநாதனை வழிபாடு செய்து கொண்டு சில நாள் அங்கேயே தங்கியிருந்தார்கள்.

பழநியாண்டவனுக்கு அபிஷேகம் செய்வித்துக் கண்குளிரத் தரிசித்தும், அவன் புகழ் பாடிப் பரவியும், அன்பர் பாடக் கேட்டுக் கசிந்து கண்ணீர் மல்கியும், அவன் புகழ் பேசித் தம் உளத்தடைத்தும், கேட்டோர் உள்ளத்தில் அடைப்பித்தும் அருள் செய்தார்கள்.