பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

வல்லிக்கண்ணன்

பூண்டி, அவிநாசி முதலாம் தலங்களைத் தரிசனம் செய்து கொண்டதோடு, பாலக்காட்டுக் கணவாய் வழியே உடுப்பி சுப்பிரமணியம், திருவஞ்சைக்களம் ஆம் திருத்தலங்களைத் தரிசித்து மீண்டார்கள், முதல் முறை உடன் சென்று தொண்டு புரிந்தவர்கள் வண்டிப்பாளையம் புலவர்கள் அ. நடேச முதலியார், ந. ஆறுமுக முதலியார் இருவரும் ஆவர்.

புதுவை அன்பர்கள் வேண்டுகோளுக் கிணங்கிப் பன்முறை புதுவை சென்றிருக்கிறார்கள். அங்கு, பங்காருப் பத்தர் சுவாமிகளிடம் மிக்க ஈடுபாடு கொண்டவர்கள். அவரோடு வடலூர் இராமலிங்க சுவாமிகளின் திருவருட் பாவின் இனிமைகளை ஆராய்வது உண்டு. அப்போது அவர் புத்தகங்களில் அடையாளம் வைக்கும் விதத்தில் வெள்ளயினாலான வேல் ஒன்றினை அமைத்துச்சுவாமிகளிடம் ஏற்பித்தார். அதனைப் பலமுறை சொற்பொழிவுகளிலும் கூறியிருக்கிறார்கள்.


சிறப்பியல்கள்

மடாதிபதிகள் கைக்கொள்ள வேண்டிய சில விதிகள் உள. அதிலும் வீர சைவ மடாதிபதிகள் கைக்கொள்ள வேண்டுவன பல. மறந்தும் புறந்தொழாராய், மற்றோர் தெய்வங் கனவிலும் நினையாது, சிவபரஞ்சுடரையே அவன் திருநாமங்களையே எண்ணுதலும், பேசுதலும் நியமமாகக் கொள்ள வேண்டிய வீர சைவ மரபினர் நம் சுவாமிகள் அவர்கள். திருமாலைப்பற்றியோ, இராமாயணம்பற்றியோ, பாரதம்பற்றியோ ஆற்றும் சொற் பொழிவுகளைக் கேட்டோர், இவர் என்ன துவைதியா அத்துவைதியா? விசிஷ்டாத் வைதியா? என்றெல்லாம் எண்ணுமாறு சிறிதேனும் புற மத தூஷணையோ, எடுத்துக் கொண்ட பொருளினுக்குப் புறம்பாகச் செல்வதோ இல்லாமல் பேசுவார்கள். திருவரங்கத்திலே, விபிடணர் சரணாகதி பேசி அரங்கநாதனடியார்கள் தம்பால் நிறைந்த ஈடுபாடுகொள்ளச் செய்தார்கள்.

ஒருக்கால் திருப்பாதிரிப்புலியூரையடுத்து 2 கல்தொலைவில் உள்ள திருவகீந்திரபுரத்தில் எழுந்தருளும் தேவநாதப் பெருமானைத் தரிசிக்கச் சென்றார்கள். அங்கே, வைணவர் பலரும் சுவாமிகளிடம் ஏதேனும் ஓர் சொற்பொழிவு செய்யவேண்டு மென்று வற்புறுத்தினர். சுவாமிகள் திருப்பாவையின் முதற் பாசுரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, வைணவ பரிபாஷைகளால் நீண்ட நேரம் ஒரு பெருஞ் சொற்பொழிவு ஆற்றினர். வைணவர் யாவரும் வியப்பெய்தினர். ஏனையோர் பெரு மகிழ்வெய்தினர். மூவுருவே ஒருருவாய் நின்ற திருக்கோலத்துடன்