பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

165

பற்றிய குறிப்புகளையெல்லாம் அந்நிகழ்ச்சி நிரலில் திரட்டியளித்தார்கள். அது ஓர் புதிய முறை மட்டுமன்றி விழாக்களைப் பற்றிப் பண்டையோர் கொண்ட கருத்துக்களையும் சிறப்புக்களையும் திரட்டிய ஓர் கருவூலமா யமைந்தது.

இன்னும் பலவிதங்களிற் சீர்திருத்தம் செய்து வந்த சுவாமிகளை 1937 ஆண்டில் ஓர் அதிகாரி அணுகினார். கோயிற் கணக்குகளைப் பரிசோதிக்க வேண்டுமெனக் கேட்டார். சுவாமிகள் அவரிடம் கோயிலுக்கே சென்று பார்த்துக் கொள்ளுமாறு கூறினார்கள். அவரோ, சுவாமிகளின் தன்மைகளையறியாதவர் போலும்! தானும் சமயத்தில் ஊன்றிய பற்று இல்லாதவர். பெரியோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகளைப் புறக்கணித்தவர் போலும் ! நான் கணக்குக் கேட்டால் நீங்கள் வருவித்துக் காட்ட வேண்டுமேயல்லாமல் என்னைக் கோயிலுக்குப் போய் மானேஜரைக் கேட்கச் சொல்கிறீர்களே என்று கேட்டார். சினக்குறி காட்டினார். உடனே சுவாமிகள், 'முருகப் பெருமான், உங்களைப் போன்றவர்களுக் கெல்லாம் கீழ்ப் படிந்து செயலாற்றும் நிலையில் எம்மை வைக்கவில்லை. எனவே, இப்பொறுப்பு இனி எமக்கு வேண்டுவதில்லை' யென அறிவித்து, அப்போதே ஒரு விலகல் கடிதம் (ராஜினாமா) எழுதி அவரிடம் தந்து விட்டார்கள்.

வந்தவர், வேறு செய்வதறியாது ஆலயம் சென்றார். மானேஜர் வாயிலாகக் கணக்குகளைச் சரிபார்த்தார். யாவும் செம்மையாக வைக்கப் பெற்றிருந்தமை கண்டார். மானேஜர் வாயிலாகச் சுவாமிகளின் இயல்புகள் சிலவற்றைக் கேட்டறிந்தார். தன் செயலுக்கு வருந்தி, மீண்டும் மடாலயம் வந்தார். சுவாமிகளைப் பதவியில் நீடித்திருக்குமாறு வேண்டினார். ஆனால் சுவாமிகள் 'ஒரு முறை நமக்கு முருகன் புத்தி புகட்டிவிட்டான். இனியொரு முறையும் அங்ஙனம் நேரக் கூடாதென்பது அவன் கட்டனை. இனி, இப்பொறுப்பு நமக்கு வேண்டாம்' என்று கூறி அவருக்கு விடை கொடுத்து விட்டார்கள்.

என்னே அறியாமை தம்மைச் செறுக்கால் உயர்த்திக் கொண்டும், ஆலயத் தொடர்பு கொண்ட யாராயிருந்தாலும் தமக்குக் கீழ்ப்பட்டவரென மதித்தும் அகந்தை கொள்வோரின் கெடுபிடிகளால் மக்களுக்கு ஏற்படும் நல்லன பல நசுக்கப்படுவதே உலகியல்போ?