பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

வல்லிக்கண்ணன்

கொண் டெழுந்து முட்டி முடுகி, வாயின் வழியே முழங்கி விரைந்து இடையீடில்லாச் சொற்றொடர் அருவியாக இழிந்து, பலதிறச் சுவை நுட்பப் பொருள்கள் மிதந்து சுழல அன்பு வெள்ளப் பெருக்காய்ப் பரவிப் பரந்து அருள் அலை கொழித்துக்கொழித்து ஓடும். நீர் பருகப் போந்த புலி, கரடி, யானை, மான், பசு முதலியன அருவி முழக்கிலெழும் இன்னொலி கேட்டு அதில் ஈடுபட்டுத் தன் தன் பகைமை மறந்து மயங்கி நிற்கும். கரை நீராடுவோர் வெள்ளத்திலுறும் மின்விசையால், பிணி நீங்கப் பெறுவர். ஞானியார் சுவாமிகள் பேச்சால் விளைந்த நலன் அளப்பரிது. திருப்பாதிரிப்புலியூரில் பலதிற விழாக்கள் நடைபெறும். அவ் விழாக்களில் கலந்து கொள்ளப் போதரும் அடியவர் 'ஞானியார்' மடத்தில் அமுதுண்பர். அவ்வேளைகளில்அடிகள் சோறிடுந் தொண்டர்களுடன் தாமும் ஒருவராகக் கலந்து அடியவர்க்கு இன்சொலால் அமுதூட்டுவது நாடறிந்த தொன்று.

சுவாமிகள் தென்னாட்டிலுள்ள பலதிருப்பதிகள் சென்று, இறைவனை வழிபட்டு, ஆங்காங்குள்ள மக்கட்கு நல்லுரை பகர்ந்து தமிழுக்கும் செந்நெறிக்கும் ஆக்கந் தேடியதை அறியாதாரில்லை. -

அடிகளிடத்துப் பல நல்லியல்புகள் செறிந்து கிடக்கின்றன. அவைகளுள் குறிக்கத்தக்கன கருத்து வேற்றுமைக்கு மதிப்பளித்தல், அவ் வேற்றுமை காரணமாகப் பிணங்காமை, சமயப் பூசல்களில் மனஞ் செலுத்தாமை, பொது நோக்கு, எவர்க்கும் எளியராந்தன்மை, பொறுமை, இன்ன பிற, இவ்வியல்புகளே பெரிதும் அடிகளிடம் என்னை அணுக்கனாக்கின என்று கூறல்மிகையாகாது.

சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் ஆண்டவன் அருள்வழி நின்று, ஐம்பதாண்டாகத் தம் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும், தமிழ் நாட்டைட் பல வழியிலும் ஓம்பிய ஒருவர் - ஓர் அறவோர் - ஒரு பெரு தொண்டர். அவர் தம் அறத்தொண்டு மேலும் மேலும் ஓங்கி வளர்தல் வேண்டும். அறுமுகப் பெருமான் அருள் சுரப்பானாக சுவாமிகளுக்கு எனது வணக்கம்.