பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/192

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

187

வெள்ளைப் பாதிரி என இருவகையுண்டு. சிவப்புப்பா திரியே பூசைக்குகந்தது; வெள்ளைப் பாதிரி நீக்கப்படுவது இதைக் குறிக்குமிடத்து "வெள்ளைப் பாதிரி ஒவ்வாதது வேறொரு பொருளிலும் என்று சுவாமிகள் கூறியபோது குழுமியிருந்த கூர்த்தமதியினர் புன்னகை செய்தனர். ஏனையோர் புன்னகையின் காரணத்தையறியாது விழித்தனர். வெள்ளைப் பாதிரிப் புஷ்பமும் ஆகாத வஸ்து, நமது சமயத்தைக் குறைகூறி ஏமாற்றித் தாழ்ந்த வகுப்பினர்களைத் தனது சமயத்துக்கு ஈர்த்துச்செல்லும் வெள்ளைப் பாதிரியும் (வெள்ளைக்காரப் பாதிரியார்) ஆகாது என்றுணர்ந்தவரே புன்னகை செய்த வராவார்.

6. இவ்வளவில் சுவாமிகளுடைய உபந்நியாசங்களின் தன்மை முதலியவற்றைச் சுருக்கிக் கொண்டு இனிச் சுவாமிகள் தமது சீடர்களோடும் ஏனைய அன்பர்களோடும் அளவளாவி நடந்துகொள்ளும் முறைகள் சிலவற்றைக் குறிக்க விரும்புகிறேன். முதன்முதலாவதாக நாம் கண்டு வியப்புறக்கூடியது சுவாமிகளுடைய ஞாபக சக்தி. உபநிடதங்களையும் தோத்திர சாத்திர பாடல்களையும் ஞாபகம் வைத்திருப்பதே நம்மிற் பலருக்கு அசாத்தியாமான காரியம். அவற்றோடு ஒவ்வொரு வருடைய வாழ்க்கை நிலைவிவரங்களையும் நினைவிருத்தி அவரவரோடு அளவளாவுங் கால் அவற்றைப் பற்றி விசாரிக்கும்போதும் சுவாமிகள் இனிய சொற்களால் மிகுந்த விநயத்தோடும் பரிவோடும் அவரவர்கள் சுகதுக்கங்களில் தமக்குள்ள ஈடுபாட்டைக் காட்டும்போதும் கேட்போர் மனங்குளிர்ந்து உவகை யெய்துவர். "சுவாமி குழந்தைபோலப் பேசும் என்று கூறாத கிழவியுமில்லை, குமரியுமில்லை. "சொல்லின் செல்வன்" என்று மேடைமீதேறிப் பிரசங்கம் செய்யும் ஆற்றல் மிக்கவர்களைப் புகழ்வதுண்டு, மேடை மீதிலும், மேடை விட்டிழிந்த பின்னும், மேடை மீதேறும் வரையிலும் எஞ்ஞான்றும் இன்சொற் பகர்ந்து செஞ்சொற் பெருக்கி வன்சொற்கடிந்து பொன்சொல் வழங்கும் சுவாமிகளுக்கே "சொல்லின் செல்வன்" என்ற பட்டம் பொருந்தும்.

7. சுவாமிகள் சாந்தம், பொறை, வெகுளாமை முதலிய நற்குணங்கள் நிறைந்த தத்துவக் குணக்குன்றெனக் கூறல் மிகையாகாது. "யாகாவா ராயினு நா காக்க" என்ற முதுமொழியை வாழ்க்கையில் நடத்திக் காட்டும் உயர்வு சுவாமிகட்கேயுரித்து. சுவாமிகளிடம் உபகாரம் பெற்று வாழ்ந்தவர்கள்,