பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/199

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

வல்லிக்கண்ணன்

ஒவ்வொரு சமயமும் ஒரு தத்துவத்தை வெளியிடுகிறது: அத்துடன், ஒரு வாழ்க்கை முறையையும் உபதேசிக்கிறது. உலகத்தின் சிருஷ்டி மக்களின் வாழ்க்கை, கடவுளின் ஸ்வரூபம் இவற்றைக் குறித்துச் சொல்லும் பகுதி தத்துவப் பகுதி. சமய தத்துவத்துக்கிணங்க வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டு மென்றுபோதிப்பது அனுஷ்டானப் பகுதி. எல்லா சமயங்களிலும் போல் சைவ சமயத்திலும் இந்த இரண்டு பகுதி இருக்கின்றன. பசு, பதி, பாசம் (ஜீவாத்மா, பரமாத்மா, மாயை) என்னும் மூன்று அம்சங்களை சைவ சமயம் குறிப்பிட்டு, இவற்றுள் பதியிலிருந்து பசுவும் பாசமும் தோன்றிப் பதியிலே மறைகின்றன என்ற சித்தாந்தப் படுத்துகிறது. இது சைவ சமயத்தின் தத்துவப் பகுதி. பசுவாகிய ஜீவன் தன்ன்னையொத்த மற்ற ஜீவன்களிடத்திலெல்லாம் அன்பு செய்வதாலும், இறைவனை பக்தியினால் வழிபடுவதினாலும், அடியார்களுக்குத் தொண்டு செய்வதினாலும்; மாயை நீங்கிப் பதியை அடையலாம் என்று சைவ சமயம் போதிக்கிறது, இது அனுஷ்டானப் பகுதி.

மேலே நாம் பார்த்ததுபோல், சைவ சமயத்தின் தத்துவ ஆராய்ச்சியில் கரை கண்டவர்கள்தங்கள் வாழ்க்கையில் அச்சமய போதனையை அனுஷ்டிப்பதில்லை. சைவ வாழ்க்கை முறையைக் கைப்பற்றி ஒழுகும் பக்தர்களுக்கும் சைவ சமய தத்துவங்கள் தெரிந்திருப்பதில்லை. தத்துவமும் தெரிந்து வாழ்க்கையிலும் சைவர்களாயிருப்பவர்களுக்கு, அந்த் உண்மைகளை சகலரும் அறிந்து கொள்ளும் படியாக எடுத்துச் சொல்வதற்கு வேண்டிய வாக்குவன்மை இருப்பதில்லை. இந்த மூன்று விதமான பெருமைகளையும் உடையவர் ஸ்ரீ ஞானியார் சுவாமிகள். அவர் சைவ சமயத்தின் தத்துவங்களை நன்கு அறிந்தவர்; வாழ்க்கையில் அச்சமய போதனைக் கிணங்கி நடப்பவர்; சைவ சமயத்தின் தத்துவங்களையும், போதனைகளையும் பற்றி அபார வாக்கு வன்மையுடன் பிரசங்கம் செய்யக் கூடியவர்.

"சோனா மாரியாகப் பொழிவார்" "கடல் மடை திறந்தாற்போல் பேசுவார்" என்பதெல்லாம் சுவாமிகள் விஷயத்தில் உபசார மொழிகள் அல்ல. ஐந்து வருஷத்துக்கு முன்பு அவர்கள் பட்டினத்தடிகளைப் பற்றிச் செய்த பிரசங்கத்தை நான் கேட்டேன். அதில் அவர் கூறிய விஷயங்கள் இன்னும் என் மனதைவிட்டு அகலாமல் இருக்கின்றன.