பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

43

குடிஅரசு இதழ் அலுவலகத்தைத் திறந்து வைக்க திருப்பாதிரிப் புலியூர் மகாசந்நிதானம் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாரிய சுவாமிகள் என்றழைக்கப்பட்ட ஞானியாரடிகளை அழைத்தார். அங்கே - வாழ்த்துரை வழங்கிய ஞானியாரடிகள் குடிஅரசு ஏட்டையும் பெரியார் அவர்களையும் வாழ்த்தியதோடு நில்லாமல் “எங்கள் சமயத்துறையில் நிலவிவரும் குறைபாடுகளையும் கேடுகளையும் போக்கி -குடியரசு மூலம் நாயக்கர் அவர்கள் சமயத்துறையையும் சீர்திருத்திட முன்வரவேண்டும்” - என்று கேட்டுக் கொண்டார்!

இன்று- இந்து மதத்தை விமர்சிப்பவர்கள் மீது பாய்ந்து - அவர்கள் மீது புழுதி வாரி இறைக்கிற நவீன இந்துக்கள் சாதி வெறிக்குத்தீனி போட்டு கலவரத்துக்கு வழிசெய்யும் மடாதிபதிகள் பலரை பார்க்கும்போது "தமிழ்மட்டுமல்ல; தமிழர்களின் ஆதி சமயம் என்று கூறப்படும் சைவ சமயமும் குறையற்றதாக கேடு விளைவிக்காததாக இருக்க வேண்டும் என்ற பரந்த பார்வையின் பாற்பட்டு பெரியாரிடம் "சமய சீர்திருத்தப் பணியையும் நீங்களே செய்யவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்த ஞானியாரடிகளின் தமிழ்ப்பற்றையும் சமயப்பற்றையும் என்னென்பது? திரு.வி.க. நடையில் சொல்வதானால் உன்ன உன்ன உள்ளம் குழைகிறது; உவகை பெருக்கெடுக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்!