பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

வல்லிக்கண்ணன்


இங்கே ஏற்கெனவே இருந்த சமயச் சண்டை, மதச் சண்டை, சாதிசண்டை புதிய கருவிகளைக் கொண்டு போராடத் தொடங்கி இருந்தன. இராமலிங்க அடிகளார் (1823-1874) சமுதாய, சமயப் போரை தமிழ்நாட்டில் மிக அமைதியாக ஆற்றத் தொடங்கி இருந்தார். அதில் அவர் வெற்றி பெற்று விட்டதாகக் கூறிவிட முடியாது. ஆனால் அவர் சமயத்துறையில் செய்த புரட்சியை வரலாறு மறைக்கவோ, மறக்கவோ முடியாது.

இராமலிங்க அடிகளார் மரிப்பதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னர் தோன்றியவர்தான் ஞானியாரடிகள். இராமலிங்க அடிகள் தொண்டை நாட்டு சென்னையம்பதியில் பிறந்து நடுநாட்டில்-வடலூரில் வாழ்ந்து மறைந்தவர். வருணாசிர மத்தை எதிர்த்தவர். இவரின் சமயக் கிளர்ச்சி புதிய சமுதாயச் சிந்தனையை விதைத்தது. ஆனால் அவரால் தமது பிரச்சார எல்லையை விரிவுபடுத்த முடியவில்லை. ஆனால் சமயச் சித்தாந்தங்களைப் பாடல்களாகப் புனைந்தார். சுற்றுப்பயணச் சாதனங்கள், புதிய அரசியல் சூழ்நிலை, சங்கங்கள் ஆகியனவெல்லாம் வள்ளலார்க்கு வாய்க்கவில்லை.

ஞானியாரடிகள் 1892ஆம் ஆண்டு மடாதிபதியாக பட்ட மேற்றுக் கொண்டார். சுமார் 50 ஆண்டுகள் இவர் பணியாற்றினார். இவர் பொறுப்புக்கு வந்த காலம் உலகம் மேலும் பல மாறுதல்களை அடைந்து இருந்தது. சென்னை இராஜதானியின் எல்லையில் தமிழ் பேசும் பகுதிகளை மட்டும் தெரிந்தெடுத்துப் பல்லக்கிலேயே சென்று சமயப் பிரச்சாரம் செய்து இருக்கிறார். இவரது பிரச்சாரம் சென்னைத் தொடங்கி திருநெல்வேலி வரை நடந்து இருக்கிறது.

மதம், சமயம் எனும் இருசொற்களையும் ஒரேபொருளில் தான் அனைவரும் பார்ப்பர். இதனைப் பிரித்துக் காட்டியவர் இராமலிங்க அடிகள் ஆவார்.

‘மத, சமய வழக்கமெலாம் மாய்ந்தது;
வருணாச் சிரமமெனும் மயக்கமும் வீழ்ந்தது’

என்பார். மதம், சமயம் என்னும் இரு சொற்களும் ஒரு பொருள் உடையனவாயினும் ஒரு நுண்ணிய வேறுபாடு அவற்றிற்கு இடையே உண்டு. ஒரே தெய்வத்தை-இறைவனை மதித்து வழிபடுவது மதம்: இறைவனை இம்மையிலேனும்