பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

ஞானியாரடிகள் பற்றி புரிதல் தோன்றியது முதல் அவரைப் பற்றிய வரலாறுகளையும், அவர் எழுதிய புத்தகங்கள் எவை என்றும் ஆராய முற்பட்டேன். திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயத்தின் நினைவில் வாழும் ஏழாம் குருநாதர், ஐந்தாம் பட்டத்து ஞானியாரடிகளின் நாற்றாண்டு நினைவு மலரை சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் தந்தார். மேலும் அடிக்கடி மடத்திற்கு செல்லும் வாய்ப்பும் எனக்கு ஏற்பட்டது. ஞானியாரடிகளின் குருபூசைச் சொற் பொழிவுகளில் நானும் கலந்து கொள்வதுடன் தீபம், நா. பார்த்தசாரதியையும் கலந்துக் கொண்டு சொற்பொழிவு ஆற்ற ஏற்பாடு செய்தேன். நா. பா. அவர்கள் ஞானியாரடிகளின் நினைவு மலரை படித்துவிட்டு சுமார் இரண்டு மணி நேரம் ஆழமான கருத்துக்களை தெளிவான நடையில் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்ச்சி என் மனதில் மேலும் தேடலை உருவாக்கியது.


நா.பா. அவர்கள் சிறிய வயதிலேயே, அதாவது 18வது வயதுக்குள், மதுரை தமிழ் சங்கம் நடத்திய பண்டிதர் தேர்வில் முதல் மாணவராக தேர்ச்சிப் பெற்றவர். ஞானியாரடிகள் நடத்திய தமிழ் கல்லூரியில் பாலபாடம், நிகண்டு, நன்னூல், தொல்காப்பியம் போன்ற நூல்கள் முதலில் கற்பிக்கும் பணியை அவர் வெகுவாக பாராட்டி புகழ்ந்தார். நாற்றாண்டு மலரில் பாடல் பரிகப் பகுதியில் வரும் ஒரு வெண்பாவை நா. பா. ரசித்து விளக்கினார்.

ஞானியாரடிகள் சிதம்பரம் மு. சுவாமிநாத ஐயரவர்களிடம் தமிழ் நாற்களைக் கற்று வந்தார். ஆசிரியர் நாள் தோறும் குறிப்பிட்ட வேளையில் மடாலயத்திற்கு வந்து கல்வி கற்பித்தார். யாப்பிலக்கணம் கற்பித்த காலத்தில், ஆசிரியர் ஓர் வெண்பா எழுதி அதற்கு வாய்பாடு, சீர், தளை முதலியவெல்லாம் எழுதித் தயாராக வைத்திருக்கும்படி சொல்வார். அடுத்த நாள் அதை அவரிடம் காட்ட வேண்டும். அந்த வழக்கப்படி ஆசிரியர் ஒருநாள் ஓர் வெண்பாவை எழுதி வைத்து விட்டுச் சென்றார்.

நற்பாடலிபுரத்துநாதனேநாயினேன்
பொற்பாம் நினதடியைப் போற்றினேன்- தற்போது
வேண்டுஞ் செலவிற்கு வெண்பொற்காக பத்து
ஈண்டு தருக இசைந்து”