பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

69

வைத்துவிட்டான். இந்த மாதிரி அயலூரிலிருந்து வண்டிவந்தால் மாட்டைக் கட்டவும் சாமான்களைப் பிள்ளைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்துக் கொள்ளுவதற்காகவும் நாட்டியது கல். சுமைதாங்கிக் கல் இருக்கிறதல்லவா, அதுபோல இதுவும் ஒரு தர்மம்" என்று சொல்லித் தீர்த்தான். மற்றப் பையன்களும் ஒப்புக் கொண்டு விட்டார்கள். கண்டுபிடிக்க முடியாத ஒரு உண்மையைக் கண்டு விட்டதாக எல்லோருக்கும் ரொம்ப எக்களிப்பு.

ஒரு பையனுக்காவது கல்லுக்கும் விளக்குக்கும் சம்பந்தம் உண்டென்று எண்ணத் தோன்றவில்லை.

லாந்தல்க் கல்லு பட்ட பாடுதான் நமது முன்னோர்கள் கண்டு வைத்துப் போன பெரிய உண்மைகள் பாடும்.

"ஒன்றாகக் காண்பதே காட்சி"

என்றார் ஒரு பெரியார்;

"ஒழிவற நிறைந்த
ஒருவ போற்றி"

என்றார் மற்றொரு பெரியார். உலகத்திலுள்ள பொருள்களை எல்லாம். ஏதோ ஒரு விதத்தில் ஆராய்ந்து, பொருள்கள் தோற்றத்தில் எவ்வளவு வேறுபட்டனவாய் இருந்தாலும், உண்மையில் ஒரு பொருள்தான். பேதமில்லா பொருள் தான் என்று கண்டு விட்டார்கள். மேலும், அந்தப் பொருள் எங்கும் வியாபித்துள்ளது; வானவெளியில் எவ்வளவு தூரம் எட்டிப் போனாலும் வெற்றிடம் என்பது இல்லாதபடி நிறைந்துள்ளது; நுணுகி நுணுகிப் போனாலும்,அணுவென்றும், அணுவுக்குள் அணுவென்றும், இறுதியில்லாதபடி செறிந்து கொண்டே போகும் தன்மையது அந்தப் பொருள் என்றும் கண்டார்கள். ஒழிவு-அதாவது வெற்றிடம், அற-இல்லாதபடி, எங்கும் நிறைந்துள்ள வஸ்து கடவுள் தத்துவம் என்றார்கள்:

"ஒழிவற நிறைந்த
ஒருவ போற்றி"

எவ்வளவு எளிமையோடும் தெளிவோடும் விஷயத்தை விளக்குகிறது வாக்கியம்!

மேல் நாட்டுக் கலைவல்லாரும் பல கருவிகள் கொண்டு ஆராய்ந்து இதே முடிவுக்கு இப்போது வந்திருக்கிறார்கள். நம்மவர்களோ அந்தக்கருவிகளின் துணையில்லாமலே ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னமேயே இந்த உண்மையைக் கண்டு சந்தேகத்துக்கு இடமில்லாமல்க் கல்லில் எழுதிவைத்த மாதிரி சொல்லி விட்டார்கள்.