பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

71

இருந்துவந்த ஒரு சுவாமிகள் சமய சம்பந்தமாக ரொம்ப அருமையாயும் தெளிவாயும் பிரசங்கங்கள் செய்ததாகவும், தாங்கள் ரொம்ப அனுபவித்ததாகவும் சொன்னார்கள். சுவாமிகளுக்கு ஊர் திருப்பாதிரிப்புலியூர் என்றும் அவர்கள் ஒரு மடாலயத்துக்கு அதிபர் என்றும் சொன்னார்கள்.

சிலநாள் கழித்து, திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனுக்கு அடுத்துள்ள தருமபுரம் மடத்தில் திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் சுவாமிகள் பரிவாரத்தோடு பல்லக்கில் வந்து இறங்கியிருக்கிறார்கள் என்று செய்தி வந்தது. மறுநாள் சாயங்காலம் நெல்லையப்பர் கோவில் வசந்த மண்டபத்தில் சுவாமிகள் பிரசங்கம் என்று துண்டுப் பத்திரிகையின் மூலம் விளம்பரமாயிற்று. சுவாமிகளின் பிரசங்கத்தைக் கேட்க நானூறு ஐந்நூறு பேர் கூடியிருந்தார்கள்.

சுவாமிகள் ஆசனத்தில் அமர்ந்திருந்தது தனியான காட்சியாய் இருந்தது. ருத்திராக்ஷ மாலையும், ஸ்வர்ணலிங்கம் தாங்கிய வடமும், திருநீற்றுப்பொலிவும், கண்ணுக்கும், மனசுக்கும் விருந்தளித்தன.

பிரசங்கம் ஆரம்பித்தது. வார்த்தையும் அக்ஷரமுமே ஒவ்வொன்றாய் நின்று நின்று வெளிவந்து ஒலித்தன. வார்த்தைகள், வார்த்தைகளின் கதி, ஆழ்ந்த குரல் எல்லாம் சேர்ந்து, இதயமே பேசுகிறது என்பதைத் தெரிவித்தன. கேட்டவர்கள் செவிகொடுத்து இதயத்தையே கேட்டார்கள். ஆகவே பொருளும் உணர்ச்சியும் கேட்டவர்கள் இதயத்துக்குள்ளே சென்று பதிந்து விட்டன.

நேரம் ஆக ஆக, உணர்ச்சியோடு கலந்து வேகம் கொண்டது விஷயம். ஆசிரியருக்கும் கேட்பவர்களுக்கும் தெரியாதபடி வார்த்தைகளும் அதிவேகமாகவே ஓடின. ஆனால், அழுத்தமாவது தெளிவாவது எவ்விதத்திலும் குறையவில்லை.

தமிழோ சாதாரணமான பேச்சில் வழங்குகிற பசுந்தமிழ். அந்தத் தமிழுக்குச் சக்தி இன்னது என்று தெரிய வந்தது; இதயத்தில் எழும் உணர்ச்சிகளை அப்படி அப்படியே பளிங்கில் வைத்துக் காட்டிய மாதிரி விளக்கிக் காட்டியது. சபையிலுள்ள ஒவ்வொருவருக்கும் தம்மோடுதான் நேர் நேராக சுவாமிகள் பேசினதாகத் தோன்றியது; பாஷை எல்லோரோடும் அவ்வளவு ஒட்டிய பாஷை.

விஷயம் கடவுள் தத்துவம். ஆனாலும், எத்தனையோ விஷயங்கள் வந்து வட்டமிட்டுச் சுழித்துப்போயின. நம்மவர்