பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

தமிழ் வளர்த்த நகரங்கள்


கூத்தினை அடியார்கள் பொருட்டுத் தில்லையில் ஆடியருளினார். இத் தலத்தில் புலிக்கால் முனிவரும் பாம்புக்கால் முனிவரும் கண்டுகளிக்குமாறே ஆடினார் என்று உமாபதி சிவனார் உரைப்பர்.

காசிமாநகரில் தோன்றிய முனிவராகிய புலிக்கால் முனிவர் ஒருகால் தில்லையின் பெருமையைத் தம் தந்தையாரிடம் கேட்டார். உடனே தில்லையை அடைந்து, ஆங்கு ஆலமர நீழலில் அமர்ந்தருளிய சிவலிங்க வடிவைத் தரிசித்து வழிபட்டார். அதுவே இப்போது திருமூலட்டானேசுவரர் திருக்கோவிலாகும். அச் சிவலிங்கத்தை நாள்தோறும் மலரிட்டு வழிபட வேண்டும் என்று விரும்பினர். வழிபாட்டுக்குரிய மலர்களின் தேனை வண்டுகள் சுவைக்கு முன்னரே அவைகளை எடுத்து இறைவனுக்கு அணியவேண்டும் என்று ஆர்வங்கொண்டார். தம் விருப்பினை இறைவனிடம் முறையிடவே, பொழுது புலர்வதற்குமுன், மரங்களில் ஏறிப் பூப்பறிப்பதற்கு ஏற்ற புலிக்கால், புலிக்கை, புலிக்கண்களைப் பெற்றார். அதனாலேயே இவர் ‘புலிக்கால் முனிவர்’ எனப் பெயர்பெற்று இறை வழிபாட்டில் இன்புற்றிருந்தார்.

அங்நாளில் பதஞ்சலியென்னும் முனிவர் ஒருவர் இருந்தார். அவர் ஆதிசேடனின் அவதாரம். திருமாலின் பாயலாகக் கிடந்த அவர், அத்திருமால் இறைவனது ஆனந்தத் தாண்டவச் சிறப்பைப் பலகால் சொல்லக் கேட்டு மகிழ்ந்தவர். அதனால் தாமும் அதனைக் கண்ணுறும் விழைவுடன் தவம்புரிந்தார். இறைவன் அத்திருக்கூத்தினைத் தில்லையில் காணலாமென அவருக்குக் கூறி மறைந்தான். பாம்புக்கால் முனிவராகிய பதஞ்சலியாரும் தில்லையைச் சார்ந்து,