பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங்களில் தில்லை

109


தில்லையில் சேக்கிழார்

சேக்கிழார் ஒராண்டிற்கு மேல் தில்லையிலேயே தங்கியிருக்கும் தனிப்பேறு பெற்றவர். ஆதலின் தில்லையின் சிறப்பையெல்லாம் நேரில் காணும் பேறுற்றவர். அவர் அத்தில்லையின்கண் இடையறாது எழுந்து முழங்கும் ஒலிகளைக் குறிப்பிடுகின்றார்.

‘நரம்புடை யாழ்ஒலி முழவின் காதஒலி வேதஒலி
அரம்பையர்தம் கீதஒலி அருத்தில்லை.’

யாழொலியும், முழவொலியும், வேதவொலியும், தேவ மாதர் பாடும் கீதவொலியும் நீங்காது ஒலிக்கும் பாங்குடையது தில்லையென்றார். இது காண முத்தி தரும் தலமாதலின், தொழுவார்தம் மும்மலங்கள் கழுவப்பெற்றுச் செம்மையான வீடருளும் செல்வப் பதி தில்லை’ என்று சொல்லியருளினார்.

தில்லையில் குமரகுருபரர்

இத்தகைய தில்லைக்குத் தென்பாண்டிக் கவிஞராகிய குமரகுருபரர் ஒருகால் சென்றார். அதன் சிறப்பைக் கண்டார். உலகிலேயே உயர்ந்த தலம் தில்லையே சிறந்த தீர்த்தம் அங்குள்ள சிவகங்கையே; இறைவன் உருவங்களுள் அம்பலக்கூத்தன் உருவே அழகும் உயர்வும் உடையது என்று பாடினார். பொன்னம்பலத்தைக் கண்டார். அது ஒரு பொற்றாமரை போன்று அவருக்குத் தோன்றியது. அப்பொன் மன்றில் ஆடும் திருக்கூத்தன் அருள்மேனி, தாமரையில் ஊறும் தேகைக் காணப்பட்டது. அப்பெருமான் அருகில் நின்று காணும் அன்னை சிவகாமியின் கரு விழிகள், தாமரையின் தேனை உண்டு களிக்கும் கரு வண்டுகளாகத் தோன்றின. அந்தக் காட்சியை அழகிய பாவாக நமக்குக் குழைத்துாட்டினார்.