பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15. தமிழ் வளர்த்த தில்லை

இலக்கியத்தில் இறைமணம்

சங்ககால இலக்கியங்களிலிருந்து தற்கால இலக் கியங்கள்வரை எந்த நூலை நோக்கினாலும் அதில் இறை மணம் கமழாமல் இருப்பதில்லை. முழுதும் இறை மணமே கமழும் இயல்புடைய இலக்கியங்களைச் சமய நூல்கள் என்பர் சான்றோர். பெரும்பாலும் தில்லை மாநகரம் வளர்த்த தமிழெல்லாம் சமயத்தமிழ், அதிலும் சைவத்தமிழ் என்றே சொல்ல வேண்டும்.

‘திருமுறைகளைக் காத்த தில்லை

தேவாரம் பாடிய மூவர்பெருமக்களும் தில்லைக்கு எழுந்தருளிச் சிற்றம்பலக்கூத்தனேச் செந்தமிழ்ப் பதிகங்களால் சந்தமுறப் பாடினர். அவர்கள் தம் பாடல்களை எழுதிய ஏடுகளையெல்லாம் தில்லைவாழ் அந்தணரிடத்தேயே ஒப்புவித்து மறைந்தார்கள். திருவாசகம் அருளிய மணிவாசகருடைய பாடல்களே இறைவனே ஏட்டில் எழுதி அவ் அந்தணாளர்களிடமே கொடுத்தான். இவையெல்லாம் தில்லைப் பொன்னம்பலத்திலேயே ஒருபால் மறைத்து, வைக்கப் பெற்றிருந்தன. அச்செய்தியைத் திருகாரையூர்ப் பொல்லாப் பிள்ளையாரின் நல்லருள் பெற்ற நம்பியாண்டார் நம்பிகளின் வாயிலாகத் தஞ்சை மன்னனாகிய இராசராசன் அறிந்தான். அவன் தில்லைக்கு வந்து அவற்றை எடுத்துத் தருமாறு தில்லை வாழ் அந்தணர்களை வேண்டினன். அவர்கள் அவ்வேடுகளே இங்குவைத்துச் சென்ற அடியார்களே வந்தால்தான் எடுத்துத் தருவோம் என்றனர்.