பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

தமிழ் வளர்த்த நகரங்கள்

'தமிழ்’ என்ற சொல்லின் முதலெழுத்தாகும். இரண்டாம் எழுத்து, மெய் அகரமல்லாத பிற உயிர்களுடன் சேருங்கால் உருவில் வேறுபடும் என்பதை விளக்கியது. மெய்யெழுத்து இத்தகையது என்பதைக் காட்டி நிற்பது மூன்றாம் எழுத்து. எனவே தமிழ் நெடுங்கணக்கு உயிர், மெய், உயிர்மெய் என்ற பாகுபாடுகளையுடையது என்றும், மெய்யெழுத்துக்கள் ஓசையால் மூவகையின என்றும், ‘தமிழ்’ என்ற பெயரே விளக்கி நிற்றல் உணர்ந்து இன்புறத்தக்கதாகும். தமிழுக்கே உரிய ழகர மெய்யைத் தன்பால் கொண்டிருப்பதும் மற்றாெரு சிறப்பாகும். எழுத்துக்களுக்கு உயிர், மெய் என்ற பெயர்களே அமைத்து, எழுத்தைப் பயிலும்போதே தத்துவ உணர்வையும் புகுத்த முனைந்த நம் முன்னோரின் நன்னோக்கினை என்னென்பது!

தமிழ் அமிழ்து

மூவாமைக்கும் சாவாமைக்கும் காரணமாவது அமிழ்து. அது மிகவும் சுவையானதொரு பொருள். மிகுந்த சுவையுடைய நம் மொழியினுக்குப் பெயரமைக்கப் புகுந்த முன்னோர் ‘அமிழ்து’ என்றே அமைத்துவிட்டனர். அதுவே பின்னாளில் தமிழ் என்று மருவிவிட்டது என்றும் கூறுவர். இதன்கண் அமைந்த அமிழ்தனைய இனிமையைக் கண்ட ஆன்றோர் இதனை வாளா கூறாது செந்தமிழ், பைந்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ், இன்றமிழ், தீந்தமிழ் என்று அடைமொழி கொடுத்தே வழங்கி வந்துள்ளனர். கவியரசராகிய கம்பநாடர், தமது இராமாயணத்தில் அயோத்தி நகரைக் குறிக்குமிடத்து,