பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

தமிழ் வளர்த்த நகரங்கள்

இப்புலவர் தாம் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அம்மையைத் தமிழ்ச்சுவையாகவே கண்டு உள்ளம் தழைக்கின்றார், “நறை பழுத்தி துறைத்தீந்தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே!"’ என்று மீனாட்சியம்மையை அவர் விளிக்குங்திறத்தால் தமிழின் இனிமையையும் அவ்வினிமைக்குக் காரணமான அகத்துறை, புறத்துறைகளையும் குறித்தருளினர்.

ஒண்டீந்தமிழ்

பிற மொழிகள் எல்லாம் எழுத்தும் சொல்லும் பற்றிய இலக்கணங்களேயே பெற்றிருக்கவும், தமிழ் ஒன்றுமட்டும் பொருள் இலக்கணமும் பெற்றுப் பொலிகின்றது. மக்கள் வாழ்வியலை வகுத்துரைக்கும் அப்பொருள் இலக்கணம் அகம், புறம் என்னும் இரு பகுதிகளையுடையது. காதல் கனியும் அகவாழ்வும் வீரம் சொரியும் புறவாழ்வும் பொருள் இலக்கணத்தால் போற்றியுரைக்கப்பெறுவனவாகும். இவையே அகத்துறை, புறத்துறை யெனப்பட்டன.

புறத்துறை இலக்கண இலக்கியங்களால் புகழும், அகத்துறை இலக்கண இலக்கியங்களால் இனிமையும் பெற்று விளங்கும் தமிழின் பெற்றியை மாணிக்கவாசகர் “ஒண்டீந்தமிழ்” என்ற தொடரால் குறித்தருளினர். அவரும் கூடலில் திகழ்ந்த தமிழ்ச் சங்கத்தில் சிவபெருமான் புலவனாக அமர்ந்து செந்தமிழாய்ந்த திறத்தைக் குறித்துள்ளார்.

“சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்
   பலத்துமென் சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதில் கூடலின்
   ஆய்ந்தஒண் டீந்தமிழ்”