பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தன்னேரிலாத தமிழ்

7

என்பது அவர் அருளிய திருக்கோவையார்ப் பாடல் அடிகளாகும்.

வில்லி சொல்லுவது

பாரதம் பாடிய நல்லிசைக் கவிஞராகிய வில்லிபுத்தூரார் தமிழ்மொழியாகிய நங்கை பிறந்து வளர்ந்த பெற்றியை ஒரு பாடலில் அழகுறப் பேசுகின்றார். அவள் பொருப்பிலே பிறந்தாள் ; தென்னன் புகழிலே கிடந்தாள் ; சங்கப்பலகையில் அமர்ந்தாள் ; வையையாற்றில் இட்ட பசுந்தமிழ் ஏட்டில் தவழ்ந்தாள் ; மதுரையில் நிகழ்ந்த அனல் வாதத்தின்போது நெருப்பிலே நின்றாள் ; கற்றாேர் நினைவிலே நடந்தாள் ; நிலவுலகில் பயின்றாள் ; இன்று தமிழர் மருங்கிலே வளர்கின்றாள் என்று குறித்தார் அப்புலவர்.

பரஞ்சோதியார் பாராட்டுவது

திருவிளையாடற் புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர் தமிழின் சிறப்பைத் தக்கவாறு குறிப்பிடுகின்றார். “கண்ணுதற் கடவுளும் கழகத்தில் கவிஞனாக வீற்றிருந்து கன்னித்தமிழைப் பண்ணுறத் தெரிந்தாய்ந்தான்; அத்தகைய அருந்தமிழ் சிறந்த இலக்கண வரம்பையுடையது; மண்ணுலகில் வழங்கும் இலக்கண வரம்பில்லாத பிற மொழிகளுடன் ஒருங்கு வைத்தெண்னும் இயல்புடையதன்று” என்று இயம்பியுள்ளார். மேலும், அச்சிவபெருமான் தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற்றம்பலவனாகத் திகழ்வதற்கும் தீந்தமிழ்ச் சுவையே காரணம் என்று கூறிப்போந்தார். கயிலையில் ஆடிய கூத்தன் ஆலங்காட்டு மணிமன்றத்திலும், தில்லைப் பொன்னம்பலத்திலும், ஆலவாய் வெள்ளியம்பலத்திலும், நெல்வேலிச் செப்பறையிலும்,