பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

தமிழ் வளர்த்த நகரங்கள்

குற்றாலச் சித்திரமன்றிலுமாகத் தென்றிசை நோக்கி ஆடிக்கொண்டே தமிழ்ச்சுவை நாடி வந்தான் என்று பாடினார் பரஞ்சோதி முனிவர். அவ்விறைவன் இடையறாது ஆடுவதால் ஏற்படும் இளைப்பையும் களைப்பையும் போக்கும் மருந்து, அருந்தமிழும் நறுந்தென்றலும் என்று நினைந்தான்.


"கடுக்க வின்பெறு கண்டனும் தென்றிசை நோக்கி
அடுக்க வந்துவந் தாடுவான் ஆடலின் இளைப்பு
விடுக்க வாரமென் கால்திரு முகத்திடை வீசி
மடுக்க வுந்தமிழ் திருச்செவி மாந்தவும் அன்றோ !”


என்பது பரஞ்சோதி முனிவரின் பாடல்.

அற்புதம் விளைத்த அருந்தமிழ்

இறைவனும் விரும்பிய இன்பத்தமிழ் தனது தெய்வத்தன்மையால் பற்பல அற்புதங்களையும் ஆற்றியுள்ளது. சுந்தரர் பாடிய செந்தமிழ்ப் பாடலில் சிந்தை சொக்கிய சிவபெருமான், அவர்பொருட்டுத் திருவாரூரில் பரவையார் திருமனைக்கு நள்ளிருளில் இருமுறை தூது சென்று வந்தான். அவிநாசித் தலத்தில் முதலையுண்ட பாலனை மீண்டும் உயிர்பெற்று வருமாறு செய்தது அச்சுந்தரர் பாடிய செந்தமிழே. எலும்பைப் பெண்ணுருவாக்கியது சம்பந்தரின் பண்ணமைந்த ஞானத்தமிழ். திருமறைக்காட்டில் அடைபட்டுக் கிடந்த திருக்கோவில் கதவங்களைத் திறந்தது நாவுக்கரசரின் நற்றமிழ். இன்னும் எண்ணிலா அற்புதங்கள் பண்ணமைந்த தமிழால் நிகழ்ந்தன.

பாரதியும் பைந்தமிழும்

இத்தகைய தெய்வநலங்கனிந்த தீந்தமிழின் சிறப்பை இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப்