பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

தமிழ் வளர்த்த நகரங்கள்

கின்றது. ஏழாம் நூற்றாண்டில் திகழ்ந்த திருநாவுக்கரசர், ‘நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக்கு அருளினேன் காண்’ என்று தருமிக்குப் பொற்கிழியளித்த வரலாற்றைத் தம் தேவாரப் பாடலில் குறிப்பிடுகின்றார். இச் செய்திகளால் கடைச்சங்கம் இன்றைய மதுரைமாநகரில் இலங்கியதென்பதும் விளங்குகிறது.

களவியல் உரையில் தலைச்சங்க வரலாறு

இறையனார் களவியல் உரையால் காணலாகும் முச்சங்கச் செய்திகளைச் சிறிது நோக்குவோம். பழந்தமிழ்நாடு இந்நாள் உள்ள கடற்குமரித் துறைக்குத் தெற்கே பன்னூறு கல் தொலைவு பரவியிருந்தது. அது பண்டைநாளில் குமரிநாடு முதலாக நாற்பத்தொன்பது நாடுகளாகப் பிரிந்திருந்தது. அப் பகுதியில் விளங்கிய தென்மதுரையே பாண்டியர்களின் முதற் கோநகரம் ஆகும். அந்நகரில்தான் பாண்டியர்கள் தலைச்சங்கத்தை நிறுவித் தமிழை வளர்த்தனர். இம் முதற்சங்கத்தை நிறுவியவன் காய்சினவழுதி என்னும் பாண்டிய மன்னன். இதன்கண் அகத்தியனார், முரஞ்சியூர், முடிநாகராயர் முதலான ஐந்நூற்றுநாற்பத்தொன்பது புலவர்கள் வீற்றிருந்து தமிழை ஆராய்ந்தனர். அவர்களால் பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரியாவிரையும் போன்ற எண்ணிறந்த நூல்கள் ஆக்கப்பெற்றன. இச்சங்கம் நாலாயிரத்து நானூற்று நாற்பது ஆண்டுகள் நிலவியது. இதில் பாண்டியர் எழுவர் கவியரங்கேறினர். அவர்கட்கு இலக்கண நூல் அகத்தியமாகும். இச்சங்கத்தின் இறுதியில் இருந்தவன் கடுங்கோன் என்னும் பாண்டியன்.