பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதுரை மாநகரம்



3. மதுரையின் மாண்பு



இனிமையான நகர் மதுரை

தமிழகத்தின் முதன்மையான நகரமாகவும் பாண்டிய நாட்டின் பழமையான தலைநகரமாகவும் இரண்டாயிரம் ஆண்டுகளாக விளங்கிவரும் இணையிலாப் பெருமையுடையது மதுரைமாநகரம். மதுரை என்ற சொல்லுக்கு இனிமையென்பது பொருள். என்றும் இனிமை குன்றாத தனிப்பெருநகரமாகச் சிறப்புற்று விளங்குவது இந்நகரம். இதனை முதற்கண் தோற்றுவித்த பாண்டியன், நகரைத் தூய்மை செய்தருளுமாறு இறைவனை வேண்டினான். மதுரையில் எழுந்தருளிய சோமசுந்தரப்பெருமான் தன் சடையில் அணிந்த பிறைமதியினின்று சிந்திய நிறைமதுவாகிய நல்லமுதால் நகரைத் தூய்மை செய்தான். அதனால் இந்நகர் மதுரையெனப் பெயர்பெற்றது என்பார் பரஞ்சோதியார். அவர் இதனைத் ‘திக்கெலாம் புகழ் மதுரை’ என்றும், ‘நண்ணி இன்புறு பூமி மதுரை மாநகரம்’ என்றும் மனமுவந்து பாராட்டுகின்றார்.

தமிழும் மதுரையும்

தமிழும் மதுரையும் இனிமையே இயல்பாய் எழுந்தவை. தமிழ் என்றால் மதுரை; மதுரை என்றால் தமிழ் ; இங்ஙனம் இவையிரண்டும் பிரிக்கமுடியாத இணைப்புடையன. அதனாலேயே மதுரையைப் போற்றப் புகுந்த புலவரெல்லாரும் தமிழொடுசேர்த்தே