பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கிய மதுரை

29

இவ் இரவுக் கடைகள் எல்லாம் முதல் யாமத்திலேயே மூடப்பட்டுவிடும்.

இரண்டாம் யாமத்தில் சங்குகளின் ஒலி அடங்கி விடும். அப்போது அப்ப வணிகர் அடையினையும் மோதகத்தினையும் தட்டுகளில் வைத்தவாறே உறங்கிக் கொண்டிருப்பர். நகர மக்களும் நன்றாக உறங்கிக் கொண்டிருப்பர். மூன்றாம் யாமத்தில் ஊர்க்காவலர்கள் துயிலாத கண்களோடும் அயராத உறுதியோடும் நகரில் உலாப்போவர். அவர்கள் கள்ளர்களை ஒற்றியறிந்து உள்ளம் தளராது திரிந்துகொண்டிருப்பர். மழை பொழிந்து தெருவில் நிறைய நீரோடும் வேளையிலும் அவர் தம் கடமையில் தவறாது கையில் வில்லும் அம்பும் தாங்கிக் காவல் புரிந்து திரிவர். கடையாமத்தில் அந்தணர் மறையினை ஒதுவர். பாணர் மருதப் பண்ணை வாசிப்பர். பாகர்கள் யானைகளுக்குக் கவளம் தந்துகொண்டிருப்பர். குதிரைகள் புல்லைத் தின்றுகொண்டிருக்கும். கடைக்காரர்கள் கடைகளின் முற்றங்களைச் சாணத்தால் மெழுகித் தூய்மை செய்வர். கள் விற்போர் கள்ளின் விலைகூறிக் கொடுத்துக்கொண்டிருப்பர். மகளிர் தத்தம் மனைக் கதவங்களைத் திறக்கும் ஒலி கேட்கும். பள்ளியெழுச்சி முரசம் முழங்கும். காளை மாடுகள் ஆரவாரம் செய்யும். சேவல்கள் கூவும். மயில்கள் அகவும். களிறுகள் பிளிறும். மகளிர் மனைமுற்றங்களைப் பெருக்குவர்.

இங்ஙனம் மாங்குடி மருதனார் காட்டும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட மதுரைமாநகருக்கும் இன்றைய மதுரைக்கும் மிகுந்த வேற்றுமை இல்லை. பண்டுபோல் இன்றும் எல்லா கலங்களும் நிறைந்து