பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் வளர்த்த மதுரை

47


அவ்வாறே மறுநாட் காலையில் திருமலை நாயக்கர் பல்லக்கு ஒன்றை யனுப்பித் திருப்பரங்குன்றில் தங்கி யிருக்கும் அருட் கவிஞராகிய குமரகுருபரரை அழைத்து வருமாறு ஏவலரைப் பணித்தார். அவரை அன்புடன் வரவேற்று மீனாட்சியம்மையின் திருமுன்பு பிள்ளைத் தமிழ்நூலை அரங்கேற்றுமாறு பணிவுடன் வேண்டினார். பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம் நடைபெற்றது. அந்நூலின் வருகைப் பருவத்துப் பாடல்களைக் குமர குருபரர் அகங்குழையப் பாடிப் பொருள் விரித்த பொழுது, மீனாட்சியம்மை ஒரு பெண் குழந்தையாக நாயக்க மன்னர் மடியில் வந்தமர்ந்து மகிழ்வுடன் கேட்டருளினர். அப் பருவத்தின் ஒன்பதாவது பாடலாகிய ‘தொடுக்குங் கடவுட் பழம்பாடல்’ என்று தொடங்கும் பாடலை அவர் இனிமையாக மனமுருகப் பாடிப் பொருள் விரித்து முடிந்ததும், மீனாட்சியம்மை மன்னர் கழுத்தில் அணிந்திருந்த முத்தாரத்தைக் கழற்றிக் குமரகுருபரர் கழுத்தில் அணிந்து அருள்செய்து மறைத்தார். இந்த அற்புதத்தைக் கண்டு மன்னரும் மக்களும் பெருவியப்புற்றனர்.

திருமலை நாயக்கர் குமரகுருபரரைத் தமது மாளிகையில் சிலநாட்கள் தங்கியருளுமாறு அன்புடன் வேண்டினார். அவரது வேண்டுகோளுக்கு இணங்கிய முனிவர் சின்னாள் மதுரையில் தங்கினார். அரசியல் அலுவல்களில் ஈடுபட்ட நாயக்க மன்னர் நாள் தோறும் காலந்தாழ்த்து உணவு கொள்வதைக் கண்ட குமரகுருபரர், ஒருநாள் அவருடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது,

“வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது”