பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் வளர்த்த மதுரை

49


மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை ஆகிய நூல்களையும் பாடித் தமிழை வளப்படுத்தினார்.

பரஞ்சோதியார் வளர்த்த பைந்தமிழ்

திருவிளையாடற் புராணத்தைப் பாடிய பரஞ்சோதி முனிவர் ஏறத்தாழ இருநூற்றைம்பது ஆண்டுகட்கு முற்பட்டவர்; வடமொழி தென்மொழிகளில் வல்லவர்; நுண்ணறிவும் நூலறிவும் படைத்தவர்; சிவபத்தியும் செந்தமிழ்க் கவிபாடும் திறனும் உடையவர். இவர் பிறவிக் கடலைக் கடத்தற்கு நன்னெறி காட்டும் ஞானசிரியரை நாடிச் சிவத்தலங்களைத் தரிசித்து வந்தார். சிவராசதானியாக விளங்கும் மதுரைமா நகரை அடைந்தார். இந்நகரில் சின்னாள் தங்கி அங்கயற்கண்ணியையும் சொக்கலிங்கப் பெருமானையும் வழிபட்டு வருங்காலத்தில் ஒருநாள் ஞானசிரியர் ஒருவரைத் தரிசித்து அவரை வணங்கி ஞானோபதேசம் பெற்றுச் சைவத் துறவு பூண்டு விளங்கினார்.

இவரது இருமொழிப் புலமையையும் வாக்கு நலத்தையும் கண்டுணர்ந்த மதுரைமாநகரப் பெருமக்கள் பலர் அவரைக் கண்டு அடிபணிந்து வடமொழியில் உள்ள ஆலாசிய மான்மியத்தைத் தமிழில் பாடித் தந்தருளுமாறு வேண்டினர். இவரும் அன்பர்களின் கருத்தை நிறைவேற்றும் மனத்தினராய் ஒருநாள் துயில் கொள்ளும்போது அங்கயற்கண்ணம்மை இவரது கனவில் தோன்றி, “நம் பெருமான் திருவிளையாடலைப் பாடுவாயாக!” என்று பணித்து மறைந்தருளினார். உடனே முனிவர் விழித்தெழுந்து மீனாட்சியம்மையின் திருவருளைச் சிந்தித்து வியந்து அவர் கட்டளைப்படியே ‘சத்தியாய்’ என்ற மங்கலச் சொல்லால் தொடங்கிக்


த. வ. க.-4