பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் வளர்த்த மதுரை

பணியாளரை அனுப்பினார். மதுரையில் வாழும் சில முக்கியமானவர்கள் வீட்டிற்கூட அந்நூல்கள் இல்லை. காட்டிலுள்ள புலவர்களையெல்லாம் கூட்டிச் சங்கம் அமைத்துத் தமிழாய்ந்த துங்க மதுரையில் ‘தமிழுக்குக் கதி'யென விளங்கும் கம்பரையும் திருவள்ளுவரையும் காணுதற்கில்லையே என்று பெரிதும் கவன்றார்; தமிழ்ப் புலவர்களும் தமிழ்ப் பயிற்சியும் இல்லாதிருப்பது கண்டு உள்ளம் இனைந்தார். அன்றே மதுரையில் தமிழ் தழைத்தோங்குதற்குரிய முயற்சியை மேற்கொண்டார்.

1901 ஆம் ஆண்டு மதுரையில் சென்னை மாநில அரசியல் மாநாடு கூடியது. அம் மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராகப் பாண்டித்துரைத் தேவர் அமைந்தார். அம் மாநாட்டின் முடிவில் மதுரையில் தமிழ்ச் சங்கம் நிறுவக் கருதியிருக்கும் தம் கருத்தினை வெளி யிட்டார். தேவரின் முயற்சியையும் கருத்தையும் மாநாட்டிற்கு வந்திருந்த பெருமக்கள் அனைவரும் முழுமனத்துடன் ஆதரித்துப் பாராட்டினர். அம் மாநாட்டைத் தொடர்ந்து சங்கம் நிறுவும் முயற்சிகள் நடைபெற்றன. 1901 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 14 ஆம் நாள் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி. மண்டபத்தில் பேரவையொன்று கூடிற்று. அதில் தமிழ்நாட்டிலுள்ள தலைவர்கள், பெரும்புலவர்கள், செல்வர்கள் ஆகிய பலர் கலந்துகொண்டனர். இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியும் கலந்துகொண்டார். இத்தகைய பேரவையில் பாண்டித்துரைத்தேவர் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினர்.

தேவரின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பாஸ்கரசேதுபதி, சங்கம் தழைத்து நிலைத்தற்குத் தம்