பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

‘என்றுமுள தென்தமிழ் இயம்பி இசைகொண்ட’ நந்தமிழ் நாட்டின்சீர் பரவுதற்குரியது. ‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தனவே’ என்று நயந்தோன்றப் பாடியுள்ள பாரதியார் உயர்ந்த கருத்தொன்றையும் உள்ளடக்கி வைத்துள்ளார். தாயோடு மொழியும் நாடும் ஒருங்குவைத் தெண்ணப்பட்டு வருதல் தொன்மை வழக்கு. மொழியால் பெயர்பெற்ற நாடுகள் உலகில் மிகுதி. ஆக, மொழியால் நாடும், நாட்டால் மொழியும் பெற்ற சிறப்புப்பெரிது; மிகப்பெரிது. நாடின்றேல் மக்களில்லை; மக்களின்றி மொழியில்லை; மொழியின்றி நூல்களில்லை; நூல்களின்றிப் பெருமையில்லை. நாட்டைச் சிறப்பித்ததனால் மற்றவற்றையும் சிறப்பித்ததாயிற்று.

‘தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்யும்’ இற்றைநாள் மக்கள் ‘தமிழ் வளர்த்த நகரங்கள்’ பற்றியும் தெரிந்துகொள்ளுதல் இன்றியமையாததாகும். தமிழின் இன்றைய சிறப்பிற்கு வித்திட்ட பெருமையுடைய. மூன்று நகரங்களைப்பற்றியும் இந்நூலில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. அவ்வந்நககரங்களின் சிறப்பு, அவற்றில் வாழ்ந்த நூலறிபுலமை வாய்ந்த ஆன்றாேர், அவர்கள் ஆக்கியருளிய அருந்தமிழ் நூல்கள் ஆகியவை குறித்த செய்திகள் அழகுறத் தரப்பட்டுள்ளன. அவை யாவும் கற்பார்க்குச் சுவையும் பயனும் தருவன.

தமக்கே யுரித்தான தண்டமிழ் நடையில் இந்நூலை யியற்றித்தந்த ஆசிரியர், திரு. அ. க. நவநீதகிருட்டிணன் அவர்களுக்கு நம் நன்றி உரியதாகுக. தமிழ்மக்கள் அனைவரும், சிறப்பாக மாணவர்கள் இதனைக் கற்று மாண்புறுவார்களாக.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.