பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8. புராணம் புகழும் நெல்லை

வேணுவனத்தில் வேய்முத்தர்

திருநெல்வேலியின் தெய்வ மாண்பை விளக்கும் புராணங்கள் இரண்டு. அவை திருநெல்வேலித் தல புராணம், வேணுவன புராணம் என்பன. இப் புராணங்களால் பண்டை நாளில் இந் நகரப் பகுதிகள் பெரியதொரு மூங்கிற் காடாக இருந்தது என்று தெரிய வருகிறது. அதனாலயே நெல்லையப்பருக்கு வேணுவனநாதர் என்ற பெயரும் வழங்கி வருகிறது. இப் பெருமான் மூங்கிலின் அடியில் முத்தாக முளைத் தெழுந்த காரணத்தால் வேய்முத்தர் என்றும் கூறப் படுவார்.

பாலிழந்த ஆயன்

இப் பகுதியில் அமைந்த மூங்கிற்காட்டின் கீழ்த் திசையில் மணப்படை என்றோர் ஊர் இருந்தது. அங்கிருந்த பாண்டியர் குலத்தோன்றலாகிய மன்னன் ஒருவன் இப் பகுதியை ஆண்டு வந்தான். அம்மன்னன் மாளிகைக்கு நாள்தோறும் ஆயன் ஒருவன் மூங்கிற் காட்டைக் கடந்து, குடத்தில் பால் சுமந்து சென்று கொடுத்து வந்தான். ஒரு நாள் காட்டின் நடுவே ஒரு மூங்கில் மரத்தின் பக்கத்தில் வரும்போது, அங்கிருந்த கல்லில் இடறிப் பாற் குடத்தைக் கீழே போட்டு உடைத்துவிட்டான். ஒரு குடம் பாலும் வீணுயிற்று. ஆயன் மனம் வருந்தி வீடு திரும்பினான்.

உளமுடைந்த ஆயன்

மறுநாளும் அவன் பாலைச் சுமந்து நடந்தான். மிகுந்த கவனத்துடன் அவன் நடந்து வந்தும் அதே